×

ஒன்றிய அரசின் புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நேரடி வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்பு

 

மும்பை: வங்கிகள் வேலை நிறுத்தத்தால் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் நாளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த நவம்பர் மாதம் கொண்டு வந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக வங்கி சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இது தவிர, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் பணிச் சுமையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (பிப். 12) வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.

நாடு முழுவதும் உள்ள 10 முக்கிய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இருப்பினும், ரிசர்வ் வங்கி அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்காததால், வங்கி கிளைகள் சட்டப்படி திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தேவை மற்றும் முக்கிய பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டாலும், இணையவழி வங்கிப் பணிகள் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் மின்னணு பணப்பரிமாற்றங்கள் தடையின்றி செயல்படும்.

ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற அலைச்சலை தவிர்க்க வாடிக்கையாளர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags : EU ,Mumbai ,State Bank of India ,SBI ,Union Government ,
× RELATED குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை...