×

பாஜகவின் டப்பா என்ஜின் முன் திராவிட மாடல் அரசின் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் எப்போதும் தலைகுனியாது: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலவ்ர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரத்தைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெற்றியை ஈட்டிவரும் ஈட்டி முனைகளே என்று வாக்குச்சாவடி முகவர்களை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வரின் உரையில்:
வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்தது எனர்ஜி பூஸ்ட் அளித்தது போல் உள்ளது. திமுக தொண்டர்களின் உற்சாகம் எனக்கும் உற்சாகத்தை தருகிறது. 49 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்ய இந்த மாநாட்டில் கூடியிருக்கிறோம். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ; இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு திமுகவுக்கு உள்ளது. தேர்தல் பணி என்றால் திமுக தொண்டர்களுக்கு ஈடு இணையே இல்லை.

தேர்தல் என்றால் மக்கள்தான் எஜமானர்கள். ஒவ்வொரு முகவர்களும் தேர்தலுக்குள் தலா 100 பேரை 5 முறை சந்திக்க வேண்டும். பரப்புரையின் கடைசி நிமிடம் வரை திமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு ஆதரவான நிலைதான் நிலவுகிறது. 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும்; மக்கள் திரட்டி ஆதரவு திரட்ட வேண்டும்.. 2021ம் ஆண்டை விட தற்போது திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவாலயத்தின் அஸ்திவாரமே தொண்டர்கள்தான்; நீங்கள்தான் என் நம்பிக்கை. திராவிட மாடல் ஆட்சி வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும் என்று மக்களிடம் நம்பிக்கை விதைக்க வேண்டும்.

இதுவரை வாக்களிக்காதவர்களை திமுகவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டியது உங்கள் பணி. இயல்பாக உரிமையோடு மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகத்தை ஒரு மணி நேரம் ஒதுக்கி கட்டாயம் படிக்க வேண்டும். 5 ஆண்டுகளில் சென்னைக்கு ஏராளமான திட்டங்களை செய்துள்ளோம்

கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை அமைத்துள்ளோம். சென்னையின் வளர்ச்சிக்கு இன்னும் பல திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் இந்த சாதனைகளைச் செய்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 350 வாக்குகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதை அடைந்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு முகவரும் தலா 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். 1.14 லட்சம் குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளார்கள். தேர்தலில் 2.5 கோடி வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம்.

திமுக மகளிர் படையினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யஉள்ளனர். ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு வாக்கையும் இலக்காக வைத்து பிரச்சாரத்தை உருவாக்கி உள்ளோம். இலக்குகளை எவ்வளவு நிர்ணயித்தாலும் வெற்றியை உறுதி செய்யும் முன்கள வீரர்கள் வாக்குச்சாவடி முகவர்கள்தான். உங்கள் உழைப்பில்தான் திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. நாம் சாதனை செய்யாத துறைகளே இல்லை. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மக்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். இதுவரை நாம் செய்த சாதனைகளை நிறுத்தி பின்னோக்கி கொண்டு சென்று விடுவார்கள். மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் வர நினைக்கும் விஷ விதைகளை நுழையவே விடக் கூடாது. பாஜக அரசு தொடர் வஞ்சகத்தையும் அதற்கு எதிராக கேள்வி எழுப்பாத அதிமுகவின் துரோகத்தையும் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

பாஜகவின் டப்பா என்ஜின் முன் திராவிட மாடல் அரசின் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் எப்போதும் தலைகுனியாது. கூட்டணி, தொகுதி பற்றி கவலைப்படாதீர்கள் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஒற்றுமையில்லாமல் இலக்கை அடைய முடியாது. 234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர் என்ற எண்ணத்தோடு தேர்தல் பணியாற்றுங்கள். என் சக்தியை மீறி உழைப்பேன் என்று சொன்னேன், அதன்படியே உழைத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

Tags : Dravita model government ,Bajaka ,Uddhav Thackeray ,Uddhav Thackeray K. Stalin ,Chennai ,Dimuka Polling Agents Conference ,Thiruvindanta ,Viluppurat, Chennai ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...