×

ப்ரோ கோட் பட தலைப்பு விவகாரம் ரவி மோகன் ஸ்டூடியோ-டெல்லி மதுபான ஆலைக்கிடையே சமரசம்: உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பும் தகவல்

சென்னை: ப்ரோ கோட் படத் தலைப்பு விவகாரத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டீஸர், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால், அதை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ப்ரோ கோட் படத்தின் தலைப்பை தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனடிப்படையில், இந்த விவகாரத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடையே இந்த மாத இறுதிக்குள் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Ravi Mohan Studios ,Delhi ,Court ,Chennai ,Madras High Court ,Ravi Mohan ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2...