×

புதிய தொழிலாளர் சட்டம், அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: 30 கோடி ஊழியர்கள், விவசாயிகள் பங்கேற்கிறார்கள்; வங்கி சேவை, பஸ் போக்குவரத்து பாதிக்க வாய்ப்பு

புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டம், அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில் 30 கோடி பேர் பங்கேற்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றிய ஒன்றிய அரசு, அதற்கு பதில் 4 சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதை நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. இந்த 4 தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொடர்புடைய விதிகளை திரும்பப் பெறுதல், முன்மொழியப்பட்ட மசோதாக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அதே போல் விவசாயிகளை பாதிக்கும் இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக கூட்டறிக்கைக்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வங்கி ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் உள்ள 10 முக்கிய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இன்று நடக்கும் இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தம் அடுத்த 24 மணி நேரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் வங்கிகள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்கள்
* ஐ.என்.டி.யூசி, ஏஐடியூசி, சிஐடியூ, தெமுச, எச்.எம்.எஸ்., ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (டியூசிசி).
* சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கம் (சேவா), ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ்.

Tags : US ,New Delhi ,Union government ,
× RELATED அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில்...