கன்னியாகுமரி: கன்னியாகுமரி கன்னியம்பலம் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. குறிப்பாக கன்னியம்பலம் பகுதியில் 12 கடைகள் உள்ளன. இந்தநிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜன், கன்னியம்பலத்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கடைகளை அகற்றி பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் கன்னியம்பலத்தை சுற்றியுள்ள 12 கடைகளை அகற்ற உத்தரவிட்டும், கடைகளை அகற்றிய பின்னர் அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியம்பலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட ஒரு கடை இடித்து அகற்றப்பட்டது.
இந்தநிலையில் கோர்ட் அறிக்கை தாக்கல் செய்ய விதித்த கெடு நாளை முடிவடைகிறது. தொடர்ந்து இன்று 11ம் தேதி கன்னியம்பலத்தில் உள்ள 11 கடைகளை இடித்து அப்புறப்படுத்த போவதாக செய்தி பரவியது. இதனை அறிந்த கன்னியாகுமரி நகராட்சியின் கீழ் கடை நடத்தும் வியாபாரிகள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், தேவசம் போர்டு நிர்வாகிகள் கன்னியம்பலத்தில் கடைகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட உள்ள வியாபாரிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் இன்று நாள் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என அறிவித்தனர். அதன்படி இன்று காலை முதலே வியாபாரிகளுக்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி ரதவீதி, சன்னதி தெரு, கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பகுதி, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடைவீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையே இன்று காலை கன்னியம்பலத்தில் உள்ள கடைகளை அகற்ற முன் ஏற்பாடாக கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி, டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கன்னியம்பலத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் கடைகளை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தினர். எனினும் கோர்ட் உத்தரவை காண்பித்து அதிகாரிகள் விளக்கி கூறினர். தொடர்ந்து ஜேசிபி வாகனங்கள் கொண்டு வரப்பட்டு கடைகள் இடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடைய அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் இன்று பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

