×

கோதையாற்றில் 5வது நாளாக மிதவை கூண்டில் சிக்காத முதலைகள்: வன அதிகாரிகள் நேரில் ஆய்வு

அருமனை: திற்பரப்பு அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட செங்குழிக்கரையில் கோதையாற்றில் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றின் மீது 2 முதலைகள் படுத்து இருக்கும் காட்சிகள் கடந்த நவம்பர் மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து வனத்துறையினர் வைத்த கேமராவில் முதலை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கோதையாற்றுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து 2 முதலைகளையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் முதலைகள் கிடக்கும் திற்பரப்பு தோட்டவாரம், செங்குழிக்கரை இடையே கோதையாற்றில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியில் ஆய்வு செய்ததுடன், படகில் சென்று முதலைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

கடந்த 21ம் தேதி அந்த பகுதியில் முதலை இருப்பதை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்த்தனர். தொடர்ந்து உறைகிணற்றின் மீது கோழியை உயிருடன் கட்டி வைத்தனர். ஆனால் அதை சாப்பிட முதலை வெளியே வரவில்லை. இதையடுத்து முதலையை பிடிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்து அதற்காக 12 அடி நீளத்தில் கூண்டு தயாரிக்கும் பணி நடந்தது. இதை தொடர்ந்து முதலைகள் இடம் பெயர்ந்து படகுசவாரி நடைபெறும் பகுதி, சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்காக கோதையாற்றில் வலை கட்டப்பட்டது.

இதையடுத்து தோட்டவாரம் செங்குழிக்கரை உறைக்கிணறு அருகே கடந்த 7ம் தேதி அடிக்கடி முதலை நடமாட்டம் இருந்த பகுதியில் 12 அடி மிதவை கூண்டை வனத்துறையினர் கோதையாற்றில் மிதக்க விட்டனர். கூண்டில் இருக்கும் இறைச்சியை சாப்பிட முதலை வரும்போது கூண்டு அடைபட்டு சிக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் 5 நாட்களை கடந்தும் மிதவை கூண்டில் முதலைகள் சிக்கவில்லை. இதனால் முதலைகளை பிடிக்கும் வனத்துறையினரின் முயற்சி தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது. இந்த நிலையில் உதவி வன பாதுகாவலர் முருகன், மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமையில் களியல் வனச்சரகர் முகைதீன் மற்றும் வன ஊழியர்கள் மிதவை கூண்டு இருக்கும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், முதலைகள் ஆற்றில் கிடைக்கும் மீன்கள், சில சிறிய விலங்குகளை சாப்பிடுவதால் மிதவை கூண்டில் வைக்கும் இறைச்சிகளை சாப்பிட வருவதில்லை. இதனால் முதலைகள் மிதவை கூண்டுக்கு வராமல் இருக்கிறது. இதனால் கூண்டில் முதலைகள் அடிக்கடி சாப்பிடும் மீன்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தென்பட்ட முதலைகள் அதன்பின் வெளியே வரவில்லை. இதனால் முதலைகள் இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றதா என்பது குறித்தும் ஆய்வு பணி நடக்கிறது. எனவே முதலையை கண்டறிந்து அவற்றை விரைவில் பிடிக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : Kotayat ,ARUMANAI ,KOTHAIAT ,VERGUZHIKARA ,SHOTALUMUDU DISTRICT ,KAPARAPARAPU ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.20 லட்சம்