×

கடவுள் உங்களை அடைய முடியும்!

மாலை நேரம்.
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்,
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்,
பேணுங்கால் பேணும் உரு ஆகும்; அல்லனும் ஆம்,
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.
நம்மாழ்வாரின் பாசுரத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நண்பர் ஒருவர் வந்தார். எப்போதும் ஏதாவது கேள்வியில்லாமல் வர மாட்டார்.
‘‘கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’’
‘‘என்ன திடீர் கேள்வி?’’
‘‘சொல்லுங்கள்’’
‘‘சரி, ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறீர்கள். கடவுள் இருக்கிறார் என்று ஒரு சாராரும், இல்லை என்று ஒரு சாராரும் சொல்வதால் இந்தச்
சந்தேகம் வருகிறது.’’
‘‘ஆமாம்’’
‘‘கடவுளைக் குறித்து என்னென்ன விதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. வரிசையாகச் சொல்லுங்கள்.’’
‘‘சொல்கிறேன். கடவுள் இருக்கிறார். கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுள் இருக்கவே இருக்கிறார். கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்பது தெரியவில்லை’’
‘‘இவ்வளவுதானா?’’
‘‘இப்போதைக்கு இவ்வளவுதான்’’
‘‘சரி, இந்த ஐந்திலும் பொதுவாக ஒரு சொல் வருகிறது அல்லவா’’
‘‘ஆமாம்’’
‘‘அது எந்த சொல்?’’
‘‘ஐந்து வாக்கியங்களிலும் இருக்கின்ற சொல் கடவுள்.’’
‘‘கடவுள் இல்லவே இல்லை என்பது இல்லை இல்லை எனப் பொருள்படும். அப்படிப் பொருள்பட்டால் கடவுள் இருக்கிறார் என வந்து விடும். கடவுள் இருக்கவே இருக்கிறார் என இரண்டு முறை சொன்னால் இருக்கிறார் என்று வலுவாகச் சொல்வதாக ஆகும். எப்படிப் பார்த்தாலும் கடவுள் இருக்கிறார்.’’
‘‘கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.’’
‘‘ஒரு விஷயம் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றோ இருக்க முடியாது என்றோ ஆகிவிடாது அல்லவா.”

‘‘ஆனால், நம்பும்படி இருக்க வேண்டுமே…”
‘‘கடவுளை நம்புவதாலும் நம்பாததாலும் ஒரு விஷயம் இருப்பதாகவோ இல்லாததாகவோ ஆகிவிடாது.”
‘‘விஞ்ஞானத்தால் கடவுளை நிரூபிக்க முடியவில்லை. விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத ஒன்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?”
‘‘ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். கடவுளை ஏற்றுக் கொள்வதாலோ கடவுளை ஏற்றுக் கொள்ளாததாலோ கடவுளுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர். கடந்து உள்ளிருப்பவர். சரி விஷயத்துக்கு வருவோம். விஞ்ஞானம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்?”
‘‘அதுதான் அறிவியல் (Science) பரிசோதனைகள் (experiments), முடிவுகள் (results)”
‘‘இருக்கட்டும். அறிவியல் என்பது எல்லா நிலைகளிலும் வெற்றி பெற்று விட்டதா? அதில் புதிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதா?”
‘‘தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன”

‘‘ஒரு விஷயத்தை சில சோதனை களைக் கொண்டு அறிவியல் தீர்மானிக்கிறது. பிறகு, அதுவே சற்று வளர்ச்சி அடைந்து முன்னால் தீர்மானித்ததை மறுக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் எத்தனையோ ஆய்வுகள் ஒன்றை ஒன்று மறுத்திருக்கின்றன. நீங்கள் பரிசோதனைகளைப் பற்றி சொல்லுகின்றீர்கள். இந்த பரிசோதனைகளிலேயே – குறிப்பாக உடல் பரிசோதனைகளிலே – சில முடிவு களைச் சொல்லி, அப்படியே இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்; நோயாளியின் தன்மையையும் இணைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ஒரு வாசகம் அச்சடித்திருக்கும். ஒரு குறிப்பிட்ட நோய்க்கு என்ன மாதிரியான வைத்தியம் செய்யலாம் என்பதில் சிறந்த மருத்துவர்களிடம் கூட அபிப்பிராய பேதங்கள் இருக்கும். எனவே, விஞ்ஞானத்தால் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானமாகச் சொல்லிவிட முடியும் என்று நினைத்துக் கொள்ள முடியாது”‘‘ஆனாலும், கைலாசம் வைகுந்தம் என்று ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாகச் சொல்வது ஏற்கும்படியாகவா இருக்கிறது.”

‘‘இப்போது பிரபஞ்சத்தில் எத்தனை தூரம் நாம் ஆராய்ந்து இருக்கிறோம். மொத்த பிரபஞ்சத்தின் அளவு தெரியவில்லை. இந்த அளவுக்குத்தான் பிரபஞ்சம் இருக்கும் என்பதை யூகிக்கவும் முடியவில்லை. அது விரிந்து கொண்டே இருக்கிறது. ‘‘அளத்தற்கரியவன்” என்று ஒரு வார்த்தையை இறைவனைக் குறித்து திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்.‘‘உண்மைதான். நாம் இந்த பிரபஞ்ச ஆய்வில் மிகக் குறைந்த அளவில்தான் முன்னேறி இருக்கிறோம்.”‘‘எங்கு பிரபஞ்சம் முடிகிறது? அதன் எல்லை என்ன? பலப்பல அண்டங்கள் இருப்பதாகவும், அப்பால் பாழ்வெளி இருப்பதாகவும் கோடிக்கணக்கான சூரிய மண்டலங்கள் இருப்பதாகவும் விஞ்ஞானமே சொல்லுகிறது. நவீன கருவிகள் மூலம் நாம் சிலவற்றை அறிந்து விட்டோம் என்றாலும் பூர்த்தியாக எல்லாவற்றையும் அறிந்து விட்டோமா என்ற கேள்வி இருக்கிறது. அண்ட சராசரங்களின் ரகசியங்கள் விரிந்து கொண்டே போவதைப் பார்க்கின்றோம். முழுமையாக பிரபஞ்சத்தினுடைய விஸ்தீரணத்தைப் பற்றியும், எங்கெங்கே எந்த விதமான கோள்கள் இருக்கின்றன என்பதைப் பற்றியும் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நிச்சயமாக வேறு ஒரு உலகத்தில் உயிர்கள் இருக்கவே முடியாது என்று சொல்ல முடியுமா? அதற்கு பிரபஞ்சத்தினுடைய இண்டு இடுக்குகள் எல்லாம் முழுமையாகத் தெரிய வேண்டும்.

பிரபஞ்சத்தின் எல்லை தெரியாத பொழுது எந்த இடத்திலும் உயிர்கள் இருக்க முடியாது என்று எப்படி நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்? எனவே, வைகுந்தமோ… கைலாயமோ… இன்றைய ஆய்வின்படி இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாமே தவிர, நிச்சயமாக இல்லை என்பதை எப்படிச் சொல்ல முடியும்?”
‘‘சரி, இதெல்லாம் எப்படியோ போகட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று மாறிமாறி பேசிக் கொண்டிருக்கிறோம். இத்தனைக் குழப்பத்தில் இருக்கும் நம்மைத் தெளிவுபடுத்துவதற்காகவாவது கடவுள் சற்று வந்து, நான் இருக்கிறேன், ஏன் என்னைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நிரூபித்து விடலாமே.”

‘‘நன்றாகக் கேட்டீர்கள். அவர் படைத்த இந்த பிரபஞ்சத்தில் அற்பத்திலும் அற்பமான நம்மிடம் வந்து தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அப்படி அவசியம் வரும்போது கடவுள் வந்து நிரூபிப்பார். இப்போதைக்கு அதற்கான அவசியம் எதுவும் கடவுளுக்கு இல்லை. சிலர் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு பூஜைகள் எல்லாம் செய்கிறார்கள். சிலர் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுளும் அவரவர் நம்பிக்கையும் அவரவர் வழிகளும் அவரவர்க்கு என்று விட்டுவிட்டு ஒரு சாட்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்”

‘அப்படியானால் கடவுளை எப்படி அடைவது?”
‘‘இல்லாத கடவுளை ஏன் அடைய வேண்டும்?”
‘‘சரி, இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவரை எங்கே தேடிப் பிடித்துக் கண்டடைவது?”
‘‘ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள். சரி, இப்பொழுது சொல்கிறேன். கடவுளை நீங்கள் அடைய முடியாது”
‘‘பிறகு?”
‘‘கடவுள் உங்களை அடைய முடியும்? ஏனெனில், அண்ட சராசரங்களையும் அசைவிக்கும் அந்தச் சக்தியை உங்கள் மனதினால் அளக்க முடியாது. அப்பாலுக்கும் அப்பாலாக இருப்பதை இந்தச் சிறிய பாத்திரத்தால் எப்படி
பிடிப்பீர்கள்.”
‘‘அதற்கு?”
‘‘கடவுள் நம்மை விரும்பும்படியாகவும், நம்மை தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் படியாகவும் வாழ்வதுதான் வழி. எனவே, அப்படி வாழ்வது தான்
‘‘ஆன்மிகம்”.

Tags : God ,Allan ,Nahmālwar ,
× RELATED சம்சார சாகரத்தை தாண்டுவிக்கும் நாமம்