×

கோவை அருகே பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது:40 பவுன் நகை மீட்பு

பெ.நா.பாளையம் : இடிகரை பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக டிஎஸ்பி பொன்னுசாமி மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவத்தன்று நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து இடிகரை செல்லும் வழியில் உள்ள புதுப்பாளையம் ரயில்வே பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி (34), மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பதும், இருவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடிகரை மற்றும் சாந்தி மேடு பகுதியில் 10 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் படி கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Goa ,Fr. ,UN Camp ,Itigarai ,Goa Peryanayakanpalayam ,
× RELATED ஆட்டோவில் வெங்காய மூட்டைகளில்...