×

புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கோலாகலம்

*திரளானோர் பங்கேற்பு

நெல்லை : புளியம்பட்டி புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவில் கூட்டு திருப்பலி நேற்று நடந்தது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டுத்திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.

தென்னகத்து பதுவை எனப்போற்றப்படும் பாளையங்கோட்டை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, புளியம்பட்டி புனித அந்தோனியார் தேவாலய திருவிழா தை மாதத்தில் 13 நாட்கள் வெகு விமர்சையாக நடக்கும்.

இந்தாண்டிற்கான பெரு விழா முதல் நாளான ஜன. 29ம் தேதி மாலை 6 மணியளவில் பாளை. மறைவட்ட அதிபர் அந்தோனி வியாகப்பன் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்குப்புனித நீர் தெளித்து ஜெப வழிபாடுகளுடன் நடந்த கொடியேற்ற நிகழ்வில் பாளை.

மறை மாவட்ட முதன்மை குரு அந்தோனிசாமி, திருத்தல அதிபரும் பங்குத்தந்தையுமான மோட்சராஜன், உதவிப் பங்குத்தந்தை சந்தியாகு, அருட் தந்தையர்கள் பீட்டர் பிச்சைக்கண், சகாயதாசன் மற்றும் பாளையங்கோட்டை மறை வட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தையர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து திருப்பலி, மறையுரை நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடந்து வந்தது. இதில் அம்பை, சங்கரன்கோவில், தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மறை வட்டங்களைச் சேர்ந்த அருள்தந்தையர்கள் சிறப்பு திருப்பலிகள் நடத்தினர்.

முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நற்கருணை பவனி கடந்த 8ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து சப்பர பவனி நேற்று முன்தினம் (9ம் தேதி) நடந்தது. அன்று மாலை நடந்த திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் பங்கேற்றார்.

விழாவின் சிகரமான பெருவிழா திருப்பலி நேற்று (10ம் தேதி) நடந்தது. இதில் முன்னாள் ஆயரும், மதுரை உயர் மாவட்டம் அந்தோனி பாப்புசாமி பங்கேற்று திருப்பலியை நிகழ்த்தினார். இதில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந்திரளாகப் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இவர்களுக்குத்தேவையான அனைத்து வசதிகளையும் திருத்தல அதிபர் மோட்சராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Puliyampatti St. Anthony's Church Festival ,Madurai Archdiocese ,Archbishop ,Anthony Pappusamy ,Palayankottai Shrine ,southern Paduvai… ,
× RELATED பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை