×

குண்டடம் அருகே வீட்டுமனைக்காக பிஏபி பாசன வாய்க்காலை மூடியதால் பரபரப்பு

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் குண்டடம் அருகே பொடாரம்பாளையம் கிராமம், முத்தமிழ் நகர் பகுதியில், பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) பாசன திட்டத்தின் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் அதிபர் சேகர் என்பவர் பொடாரம்பாளையம் பகுதியில், பொன்னாபுரம் கிராமத்திற்கு செல்லும் பிரிவு மாநில நெடுஞ்சாலை அருகே சுமார் 2.50 ஏக்கர் நிலத்தை வாங்கி, வீட்டுமனை பிரிவாக மாற்றி விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலத்தின் அருகிலேயே, பொடாரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு, கடந்த 50 ஆண்டுகளாக பிஏபி பாசன திட்ட கிளை கால்வாய் மூலம் பாசன நீர் சென்று வருகிறது. இந்த பாசன கால்வாய், புதிய வீட்டுமனை பிரிவின் மையப் பகுதியாக சென்றால் குடியிருப்பவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள், பாசன சங்க தலைவர் ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஒப்புதல் வாங்கி ரியல் எஸ்டேட் இடைத்தரகர் மணி என்பவர் மூலம், கால்வாயின் வழித்தடத்தை மாற்றி, அருகிலேயே புதிய கால்வாய் அமைக்கப்பட்டதாகவும், இதற்கிடையில் பழைய பாசன கால்வாய் முழுமையாக மூடப்பட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கோவை-தாராபுரம் சாலை, பொன்னாபுரம் பிரிவு அருகே பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குண்டடம் போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ரியல் எஸ்டேட் அதிபர் சேகர் மற்றும் இடைத்தரகர் மணி ஆகியோரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர்.

இதில், விவசாயிகளுக்கும், ரியல் எஸ்டேட் இடைத்தரகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து, தாராபுரம் வருவாய்த் துறையினர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில்,“புதிய கால்வாய் விவசாயிகளுக்கு போதிய பாசனத்தை வழங்கவில்லை என்றால், பழைய வழித்தடத்தில் மீண்டும் பாசனநீர் செல்ல அனுமதி அளிக்க தயார்” என ரியல் எஸ்டேட் அதிபர் சேகர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பழைய பாசன கால்வாயை, அதே இடத்தில் மீண்டும் தோண்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த துரைசாமி கூறுகையில், ‘பிஏபி திட்டம், மேற்கு தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பதால், கால்வாய்களின் இயல்பான வழித்தடங்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும், அரசு துறைகள் கடும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பிஏபி பாசன கால்வாய் மராமத்து பணிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம், அதேபோல் எங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர விவசாயிகள் சார்பில்வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

Tags : Kundadam ,Tarapuram ,Parambikulam Aliyar ,PAB ,Muthamizh Nagar ,Potarampalayam ,Tiruppur district ,Tiruppur ,Shekhar… ,
× RELATED பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை