×

வவ்வால்கள் தாக்குதல்களால் விளைச்சல் பாதிப்பு இலவம் பிஞ்சுகளுக்கு விலை நிர்ணயம் தேவை

*வவ்வால்களை கட்டுப்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சுகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஓட்டணை, கோவிலாங்குளம், வருசநாடு, சின்னாநகர், தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை, சிங்கராஜபுரம், முருக்கோடை, மணலாற்றுகுடிசை, ராயர்கோட்டை, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, குமணன்தொழு, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இலவம் பிஞ்சு சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மரங்களில் காய்த்து தொங்கும் இலவம் பிஞ்சுகளை தின்பதற்காக வவ்வால்களும் சுற்றி தொல்லை கொடுத்து வருகின்றன.

இதனால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் இரவு நேரங்களில் இலவமரம் காவலுக்கு செல்லும் கட்டாய பணி நடைபெற்று வருகிறது. சில விவசாயிகள் பட்டாசு வெடித்தும் சத்தமிட்டு வருகின்றனர். இந்நிலையில் வவ்வால்கள் சிறிது நேரம் இலவம் பிஞ்சு கடிக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் வவ்வால்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சுமார் ஒரு நாள் இரவில் மட்டும் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் இப்பகுதிகளில் தங்கி இலவம் பிஞ்சுகளை கடித்து தின்று நாசம் செய்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பலத்த சேதம் அடைவதாகவும் தெரிவித்தனர்.

விளைச்சல் பாதிப்பு:

இதுகுறித்து வருசநாடு பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் வவ்வால்கள் தமிழ் மாதங்களான கார்த்திகை மாதம் முதல் மார்கழி, தை, மாசி பங்குனி என ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து இலவம் பிஞ்சுகளுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.

இதனால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. மேலும் இலவம் விவசாயம் செய்வதில் மிகவும் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் கடமலை மயிலை ஒன்றியத்திலுள்ள இலவம் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.

கைகொடுக்கும் விலை:

விவசாயி சேகர் கூறுகையில், ‘‘தற்போது ஒரு கிலோ இலவம் பிஞ்சு ஒரு கிலோ ரூ.190 முதல் ரூ.200 வரை விலை போகிறது. இந்நிலையில் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கிச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் இலவம் பிஞ்சு ஊக்குவிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் இலவம் விவசாயத்திற்கு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோல் மயிலாடும்பாறை பகுதியில் அனைத்து கிராமங்களிலும் இலவம் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது இலவம்பிஞ்சு சீசன் களை கட்ட தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக இலவம்பிஞ்சு உற்பத்தி அதிக அளவில் தொடங்கியுள்ளது.

மேலும் விலை ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானதால் விவசாயிகள் உற்சாகத்துடன் இலவம் பிஞ்சுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருப்பு வைத்திருந்த இலவம் பிஞ்சு விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தற்போது இலவம்பஞ்சு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் கடந்த ஆண்டு சேகரித்து வைத்த இலவம் பஞ்சுகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை நிர்ணயம் செய்யணும்:

மேலும் வெளியூர்களில் இருந்து யாரேனும் இடைத்தரகர்கள் வந்தாலும் அவர்களை அனுமதிப்பதில்லை. இவ்வாறு குறைந்த விலையில் இலவம் பிஞ்சு மற்றும் பஞ்சினை வாங்கி அதனை மொத்தமாக பெரிய குடோன்களில் பதுக்கி வைத்து குறிப்பிட்ட மாத இடைவெளிக்கு பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்து இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

எனவே வருடம் முழுவதும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளை விட இடைத்தரகர்களுக்கு அதிக லாபம் சென்றடைகிறது. எனவே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் படி இலவம் பிஞ்சு மற்றும் பஞ்சு விற்க்கும் விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கிராம பொதுமக்கள் விவசாயிகள்‌ தெரிவித்தனர்.

Tags : Dutch-Mayli Union ,Kadamalia-Maylai Union ,Ottana ,Kovilangulam ,Varasanadu ,Sinnanagar ,Thangammalpuram ,Thummakuntu ,Waliparara ,Singarajapuram ,Murukoda ,Manalatukudisai ,Rayarkot ,
× RELATED பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை