×

பென்னாகரம் அடுத்த ஏரியூரில் ஓட்டல், பேக்கரி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

*7 உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

பென்னாகரம் : பென்னாகரம் தாலுகா பகுதியில் உள்ள உணவகம், பேக்கரி, பாஸ்ட் புட் கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், விதி மீறிய உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர், ஓட்டல்கள், பேக்கரி மற்றும் டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், மளிகை கடைகள், பெட்டிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது விதிமுறைகள் பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமேற்றிகள் அதிகம் சேர்க்கப்பட்ட கார வகைகள் மற்றும் தரம் குறைந்த நாள்பட்ட கப்கேக்குகள், அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்கள், சில்லி சிக்கன் விநியோகம் செய்தது என சுமார் 10 கிலோ அளவிலான பொருட்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.

மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் ஆகியவை உணவகத்தில் உணவு பறிமாறவும், பொருட்களை வழங்க பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பேப்பர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரண்டு பேக்கரி மற்றும் இரண்டு உணவகங்கள், ஒரு பாஸ்ட் புட் கடை என 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரமு, இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.1000 வீதம் 7 கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

உணவகங்கள் சமையல் எண்ணெய்யை ஒரு முறைக்கு மேல் பயன் படுத்தாமல், மீதமாகும் சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ டீலரிடம் அளித்து, அதற்கு உரிய தொகையை பெற்றுக் கொள்ள வழிவகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்துவதற்கு மாற்றாக துணிப்பை பயன்படுத்துவது குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டினர். விதிமுறை மீறுபவர்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க 9444042322 செல்போன் எண் வழங்கப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் பேக்கரி மற்றும் பாஸ்ட் புட் கடையில் பயன்படுத்திய பாதாம் பவுடர் மற்றும் உரிய விபரங்கள் இல்லாத சில்லி சிக்கன் மசாலா பவுடர் ஆகியவற்றை பகுப்பாய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, ஆய்வறிக்கை அடிப்படையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், கடை உரிமையாளர் மீதும் எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.

Tags : Eriyur ,Bennagaram ,Bennagaram taluka ,Dharmapuri district… ,
× RELATED கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு...