×

கர்நாடக முதல்வரை பாராட்டி பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ அதிரடி நீக்கம்: சித்தராமையா மீது குமாரசாமி காட்டம்

பெங்களூரு: கர்நாடக அரசியலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக மூத்த தலைவர் நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஜி.டி.தேவேகவுடா இருந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய முதல்வர் சித்தராமையாவைத் தோற்கடித்துப் பெரும் சாதனை படைத்தவர். ஆனால், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி சி.பி.சுரேஷ் பாபு என்பவருக்கு வழங்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

இதனால் கடந்த சில மாதங்களாகக் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருந்த அவர், தனது தொகுதியில் சாலை, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சரும் கட்சியின் மாநிலத் தலைவருமான குமாரசாமி, ஜி.டி.தேவேகவுடாவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்குவதாக அறிவித்தார். அப்போது பேசிய அவர், ‘ஜி.டி.தேவேகவுடா தற்போது எங்களுடன் இல்லை, அவரைப் பற்றி இனிமேல் எதையும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர்களை எதற்கு எங்களுடன் வைத்திருக்க வேண்டும், முதல்வர் சித்தராமையாவுக்கு நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் எங்களுக்குத் தேவையில்லை’ என்றும் காரசாரமாகக் கூறினார். முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்குத் ஜி.டி.தேவேகவுடா உடந்தையாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags : Janata Dalam ,MLA ,Karnataka ,Kumarasamy Kadam ,Siddaramaiah ,Bangalore ,Janata Dalam Party ,State ,Samundiswari Constituency Assembly ,Mysore ,District ,G. ,D. ,Devegawuda ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...