×

விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அண்ணாமலை, மாநில நிர்வாகிகள் கடும் மோதல்

சென்னை: பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலைக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மாற்றத்திற்கான பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜகவின் சக்திவாய்ந்த பதவிகளில் ஒன்று அமைப்பு பொதுச்செயலாளர் பதவி. அந்த பொறுப்பில் கேசவ விநாயகம் இருந்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பொறுப்பை அவர் வகித்து வந்தார். பாஜகவின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் முக்கிய முடிவுகளிலும் இவரது பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய 2 அமைப்புகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் மிக முக்கியமான பொறுப்பு தான் அமைப்பு பொதுச்செயலாளர் பதவி. பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தாலும், நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அமைப்புச் செயலாளரிடம் ஒப்புதல் வாங்கவேண்டியது கட்டாயமாகும். அந்த அளவுக்கு இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுவும் பாஜகவில் வெளிப்படையாக கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகாரம் மையமாக இந்த பதவி என்பது இருந்து வருகிறது. இந்தப் பதவியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் மட்டுமே நியமிக்கப்படுவார்.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, கே.டி.ராகவன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது அண்ணாமலை திடீரென கொந்தளித்தார். அவர் அனல் பறக்க பேசினார். அவர் பேசும் நிர்வாகிகள் நயினார் உள்பட அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் பேசும்போது, ‘‘தேர்தல் பணிகளில் இருந்து என்னை ஒதுங்கியது ஏன்?. ஆர்எஸ்எஸ் மற்றுமு் பாஜக வின் தேர்தல் வியூகத்தை என்னிடம் கூறுங்கள், நான் கட்சிக்காக உழைக்கிறேன். திமுகவை வீழ்த்த என்டிஏவின் வியூகம்தான் என்ன?. தேர்தல் வியூகம் குறித்து என்னிடம் இதுவரை மாநில தலைமையோ, தேசிய தலைமையோ விவாதிக்காதது ஏன்?. பொறுப்பு முக்கியம் இல்லை, வியூகம் தான் முக்கியம்.

சட்டமன்ற தேர்தலில் என்டிஏ வெற்றி பெறுவதற்கான வியூகம் தொடர்பாக என்னுடன் யாரும் இதுவரை விவாதிக்கவில்லை. முதலில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த என்டிஏவிடம் என்ன வியூகம் உள்ளது? அதை கூறுங்கள். வியூகம் பற்றி விவாதிக்காமல் நான் எப்படி களத்திற்கு சென்று அரசியல் செய்ய முடியும்?. வியூகம் என்ன என்று கூறாமல் என்னை தேர்தல் பணியாற்றுமாறு கூறினால் எப்படி பணியாற்ற முடியும்?.

கமலாலயத்தில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரின்டரில் பிரிண்ட்டு எடுத்து தேர்தல் பணியை தொடங்குகள் என்று வெறும் பேப்பரை கொடுத்தால் மட்டும் போதுமா?. எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளர்களாக நியமித்தனர்?. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மற்றும் மதுரை தெற்கு, சென்னையில் விருகம்பாக்கம் என மாநிலம் முழுவதும் 6 தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்ததற்கு என்ன வியூகம் காரணம்?. என்னை வேண்டும் என்றே அலைய விடுவதற்காகவா? பாஜக தேர்தல் வியூகத்தை விளக்கி கூறினால் நான் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராக பணியாற்ற தயார்.

வியூகத்தை கூறாமல் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்கிற தொனியில் என்னை கட்சி அணுகுவது நியாயமா?. இது என்ன பண்ணையார் கட்சியா? என்னை சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்கிறீர்கள், தொகுதி பெயரை கூறுங்கள், பணியை தொடங்குகிறேன். தொகுதியை கூறாமல் வேலை செய்யச் சொன்னால் 234 தொகுதியிலும் போய் நான் வேலை செய்ய ேவண்டுமா? தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதியை கூறி என்னை நிற்குமாறு கூறினால் என்னால் எப்படி என்னால் அந்த தொகுதியில் வெல்ல முடியும்?. வெற்றிக்கான வியூகத்தை கூறினால் பாஜக மற்றும் என்டிஏ வெற்றிக்காக எந்த பணி கொடுத்தாலும் செய்யத் தயார் என்று காரசாரமாக பேசினார்.

அவரது கொந்தளிப்பான பேச்சால், நிர்வாகிகள் அமைதியாக இருந்தனர். அப்போது தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேர்தல் வியூகத்தை வெளியில் சொல்ல முடியாது. கடந்த மக்களவை தேர்தலில் உங்களிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தோம்.40 தொகுதியிலும் தோற்றோம். தேர்தல் வியூகத்தை சொன்னால், எதிர்க்கட்சிகளுக்கு வியூகம் சென்றுவிடும். அதனால் அதை வெளியில் சொல்ல முடியாது. தமிழகத்தில்20, 25 தொகுதிகளில் நான் வெற்றி பெற்றிருந்தால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் பின்னால் நான் செல்ல வேண்டிய நிலை பாஜகவுக்கும், மோடிக்கும் ஏற்பட்டிருக்காது. அதற்கு தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விதான் காரணம். அதற்காகத்தான் நான் கூட்டணி அமைத்துள்ளோம். அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். மோதல்கள் இருக்கக் கூடாது என்றார்.

அப்போதுதான் மொத்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் கேசவ விநாயகம் குறித்து குற்றச்சாட்டுக்களை கூற ஆரம்பித்தனர். கூட்டத்தின் முடிவில், கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் மாற்றத்துக்கு பல்வேறு காரணம் கூறப்படுகிறது.

சென்னை வந்துள்ள பி.எஸ்.சந்தோஷ் கூட்டத்தில் பேசும்போது, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைவர்கள் தங்களை வளர்க்கவும், முன்னிலைப்படுத்துவதில் தான் தீவிரமாக இருந்து வருகிறார்கள். கட்சி எப்படி போனால் எனக்கு என்ன என்ற பாணியில் இருந்து வருகிறார். இதனால், பாஜகவின் செல்வாக்கு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கட்சிக்குள் உள்ள தலைவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. ஒருவரை ஒருவர் குறிவைத்து தாக்குவதிலும், அவர்களை வெளியேற்றுவதிலும் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். அதே போல அண்ணாமலை போன்றவர்கள் கட்சிக்குள் இருந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அமைப்பு செயலாளர் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இது எந்தவிதத்தில் நியாயம். மேலும் கட்சியில் வேண்டியப்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கேசவ விநாயகமும் உடந்தையாக இருந்து வருகிறார். கட்சி ஒருவரை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்பட்ட அண்ணாமலை அப்பதவியில் இருந்து விலகுகிறார். தேர்தல் பணியை செய்ய மாட்டேன் என்று மிரட்டல் விடுக்கிறார். இந்த அளவுக்கு மிரட்டலை எல்லாம் எப்படி விட்டு வைத்தீர்கள் என்று அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இப்படி பல்வேறு பிரச்னைகளால் நதி போன்று இருந்த பாஜக, தற்போது கூவம் போன்று நாற்றம் அடிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமைப்பு பொதுச்செயலாளர் கட்சியை வளர்க்கும் பணியை பார்க்காமல், அவரின் எண்ணம் வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கேசவ விநாயகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் கூட இல்லாத இக்கட்டான சூழலில், இவ்வளவு பெரிய பதவி மாற்றம் நிகழ்ந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு எடுத்து வேலை செய்த கேசவ விநாயகன் இனிமேல் தமிழ்நாடு முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.ன் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜ, ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மோதல், கேசவ விநாயகம் பதவி பறிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மாநில நிர்வாகிகள் அதிகாரத்துக்காக மோதிக் கொள்வது, அதிமுகவை கவலையடைச் செய்துள்ளது. அதேநேரத்தில் இப்படி மோதிக் கொள்பவர்களுக்கு எப்படி அதிக சீட் கொடுப்பது என்று எடப்பாடி பழனிச்சாமியும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிமுக கூட்டணியில் அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Annamalai ,Chennai ,BJP ,RSS ,Secretary General ,Kesava Vinayagam ,Tamil Nadu ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...