கடலூர், பிப். 10: கடலூர் மாவட்டத்தில் நேற்று துவங்கிய பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை 30,550 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 3ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
முன்னதாக, பிப்ரவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், பிளஸ் 2 வகுப்புக்கு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 248 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் 30,550 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 196 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், கடலூர், சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இத்தேர்வுகள் வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
