புதுடெல்லி: ‘அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த்தத்தில் இந்திய விவசாயிகள் மற்றும் உள்நாட்டு தொழில்துறையின் நலன்களை காப்பதற்கான போதுமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன’ என ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறி உள்ளார். இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்று யாராவது கூறினால், அவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் அல்லது இன்னும் அவர்களுக்கு தெளிவு தேவை என்றே அர்த்தம். இரு நாடுகளுக்கும் குறிப்பிட்ட வகை பொருட்கள் குறித்து சில உணர்திறன்கள் உள்ளன. அவற்றுக்கான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்த வரை நாங்கள் தேவையான அனைத்தையும் பாதுகாத்துள்ளோம். பால் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பொருட்கள், இறைச்சி, கோழி, சோயா மாவு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றில் இந்தியா எந்த வரிச் சலுகைகளையும் வழங்கவில்லை. இந்தியா இறக்குமதி செய்யும் சில பருப்பு வகைகள் உள்ளன. அவற்றுக்கு நாங்கள் சில சந்தை அணுகலை வழங்கியுள்ளோம். இது ஒரு பரஸ்பர பரிமாற்றமாக இருக்க வேண்டும். அமெரிக்க சந்தையில் நாம் பொருட்களை குவிக்கும் போது அவர்களும் அதற்கு சமமான வர்த்தகத்தை எதிர்பார்ப்பார்கள். நாம் எதையும் கொடுக்கவில்லை என்றால், அமெரிக்காவில் நமது விவசாயிகளுக்கான சந்தையை எப்படி திறக்க முடியும்?
இந்தியா தனது துறைகளை மிகவும் திட்டமிட்ட முறையில் திறந்துவிட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் மிகவும் சமநிலையானவை. நன்கு சிந்திக்கப்பட்டவை. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஆதரவளிக்கும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை, உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய விவசாயிகளுக்கும் அவை ஆதரவளிக்கும். இந்த வர்த்தக ஒப்பந்தம், ஏற்கனவே 50-55 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு உதவும்.
சீனா போன்ற நமது போட்டி நாடுகள் 35 சதவீதம் வரை வரி செலுத்தும் நிலையில், நமக்கு 18 சதவீத வரியின் காரணமாக அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு போட்டி நன்மை கிடைக்கும். இந்த ஒப்பந்தம் நிச்சயம் இந்தியா விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும். அவர்களின் விளைபொருட்களுக்கு அதிக மதிப்பை வழங்கும். இன்று கூட அமெரிக்காவிலிருந்து 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும்.
அதை நாம் உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தேவையை உருவாக்கும். அதை கருத்தில் கொள்ளும் போது அமெரிக்காவிடம் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்குவதில் இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.
தற்போது இந்தியாவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை அறிவித்துள்ளன. எனவே, நாட்டில் 10 ஜிகாவாட் டேட்டா சென்டர்கள் அமைக்கப்பட வேண்டியிருக்கும்.
அதற்காக இந்தியாவுக்கு தேவைப்படும் உபகரணங்களை அமெரிக்காவால் வழங்க முடியும். நமக்கு விமானங்கள் தேவைப்படப் போகின்றன. விமானங்களுக்கான என்ஜின்கள் தேவைப்படப் போகின்றன. உதிரி பாகங்கள் தேவைப்படப் போகின்றன. போயிங் நிறுவனத்திடமிருந்து மட்டும் விமானங்களுக்காக 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்கள் ஏற்கனவே உள்ளன. என்ஜின்களுக்கான ஆர்டர்களும் உள்ளன.
எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய், விமானப் போக்குவரத்துத் துறைக்கு மட்டுமே குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலருக்கும் மேல் தேவைப்படும். நிலக்கரிக்கு மட்டும் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் தேவைப்படும். இப்போதே இந்தியா அமெரிக்காவிலிருந்து 45 முதல் 50 பில்லியன் டாலர் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இவை இந்தியா உற்பத்தி செய்யாத பொருட்கள். இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
* புதிதாக எதுவும் இல்லை.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் இந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கூடுதலாக, டேட்டா சென்டர்களை ஊக்குவிக்க, செயற்கை நுண்ணறிவு திட்டத்தை ஊக்குவிக்க, மற்றும் இந்தியாவில் முக்கியமான உற்பத்தி மற்றும் முக்கியமான கனிமங்கள் பதப்படுத்துதலை ஊக்குவிக்க விரும்புவதாக பட்ஜெட்டில் அறிவித்தோம்.
இவை அனைத்திற்கும் உயர்தர இயந்திரங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பொருட்கள், என்விடியா சிப்கள், அத்துடன் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கான செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் தேவைப்படும். இவை அனைத்தும் எங்கிருந்து வரப்போகின்றன? இவை அனைத்தும் அமெரிக்காவில் இருந்துதான் வரப்போகின்றன. எனவே ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர் என்பது குறைவான மதிப்பீடு. 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பும் ஒரு நாட்டிற்கு இது மிகவும் குறைவான மதிப்பீடு.
இவ்வாறு அவர் கூறினார்.
* எந்தெந்த பொருட்களுக்கு சலுகை, அனுமதியில்லை
ஒன்றிய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளுக்கு சிறிதளவு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அம்சமும் சேர்க்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் விவசாய துறைக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தபோதிலும், விவசாயிகளை எந்த உலகச் சந்தையுடனும் இணைக்கவில்லை. இப்போது நாம் வேகமாக 3வது இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்கா ஒப்பந்தத்தில் மரபணு மாற்றப்பட்ட எந்தவொரு பொருட்களையும் இந்தியா அனுமதிக்காது.
இது முக்கியமான முடிவு. இறைச்சி, கோழி, பால் பொருட்கள், சோயாபீன், மக்காச்சோளம், அரிசி, கோதுமை, சர்க்கரை, சிறுதானியங்கள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, சிட்ரஸ் பழங்கள், பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, எண்ணெய் வித்துக்கள், எத்தனால் மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு எந்தவிதமான வரிச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.
உமி நீக்கப்பட்ட தானியங்கள் மற்றும் மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, பீன்ஸ், வெள்ளரிக்காய், காளான்கள், உறைந்த காய்கறிகள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை மற்றும் கலப்பு பதப்படுத்தப்பட்ட காய்கறிகளும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குள் நுழையாது. திரவ, தூள் மற்றும் செறிவூட்டப்பட்ட பால், கிரீம், தயிர், மோர், வெண்ணெய், நெய், வெண்ணெய் எண்ணெய், பனீர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களும் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படாது.
கருப்பு மிளகு, கிராம்பு, காய்ந்த பச்சை மிளகாய், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயம், இஞ்சி, மஞ்சள், ஓமம், வெந்தயம், கடுகு, ராய் மற்றும் பிற மசாலாப் பொடிகள் உட்பட மசாலாப் பொருட்களும் வராது. இது இந்திய விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்’’ என்றார்.
