- சந்திரபாபு நாயுடு
- யூனியன் அரசு
- அமராவதி
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஒன்றிய அரசு...
அமராவதி: சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு பதிலாக செயல்திறனற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கி ஒன்றிய அரசு அதிக வரி வருவாயை அள்ளித் தருகின்றன.
ஆனால், வளர்ந்த மாநிலங்கள், மக்கள்தொகை உள்ளிட்ட காரணங்களை காட்டி, செயல் திறனில் பின்தங்கியிருக்கும் வடமாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது. இதற்கு, என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு செழிக்க வேண்டுமானால் அனைத்து பகுதிகளும் செழிக்க வேண்டும். மாநிலங்கள் கூட்டாளிகளே தவிர யாருக்கும் எதிரிகள் அல்ல. ஆனால் தென் இந்திய மாநிலங்கள் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னேறி உள்ளது. பொருளாதார சீர்த்திருத்தங்கள் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றன. தனிநபர் வருமானமும் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக நிதி பகிர்வு ஒரு பிரச்னையாக உள்ளது.
இது இயற்கையாகவே மனக்கசப்பை ஏற்படுத்தும். நமது கொள்கைகள் எப்போதும் செயல்திறனற்ற மாநிலங்களுக்கு சாதகமாக இருக்கக் கூடாது. மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அந்தந்த மாநில அரசுகள், அரசியல் கட்சிகளின் பொறுப்பு. அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பின்தங்கிய மாநிலங்கள் படிப்படியாக தங்களை திருத்திக் கொள்வதுதான் நல்ல அறிகுறி.
நாம் இப்போது வயதான மக்கள்தொகை அதிகரிக்கும் பிரச்னையை எதிர்கொள்கிறோம். ஐரோப்பா, ஜப்பான், தென் கொரியாவில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். எனவே நமது மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலில் நான் தான் கூறினேன். இப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கூறி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
