புதுடெல்லி: சுருக்குமடி வலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், அதேப்போன்று கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க 8 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக மீனவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தலாம் என்றும் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் இந்த விவகாரம் என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்பதால் இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்டன் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘சுருக்குமடி விவகாரத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு அமல்படுத்த ஏன் காலதாமதம் செய்கிறது என்று கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ்,‘‘இந்த விவகாரத்தில் உருவாக்கப்பட்ட நிபுணர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், சுருக்குமடி வலையை 5 நாட்டிக்கல்லுக்கு மேல் பயன்படுத்தலாம். அதில் வரையறை கிடையாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் இதில் மாநில அரசுதான் அதனை அமல்படுத்த காலதாமதம் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்,‘‘சுருக்குமடி வலையால் அதிகப்படியான பாதிப்பு உள்ளது. எனவே அதனை அடிப்படையாக கொண்டு தான் மாநில அரசு தரப்பில் அசராணை பிறப்பிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுபோன்ற சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை நடைமுறைப் படுத்துவது என்பது ஏற்புடையது கிடையாது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் ஆலோசித்து பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.
