புதுடெல்லி: நீட்-பிஜி கட் ஆப் மதிப்பெண் எதன் அடிப்படையில் குறைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்த ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட்-பிஜி 2025 நுழைவுத்தேர்வில் பொதுப் பிரிவினருக்கு தகுதி சதவீதம் 50 ஆகவும் (276 மதிப்பெண்), எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு தகுதி சதவீதம் 40 ஆகவும் (235 மதிப்பெண்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 2 சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகும், நாடு முழுவதும் 18,000க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ இடங்கள் காலியாக இருந்தன. இதனால், தகுதி சதவீத மதிப்பெண்களை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் குறைத்தது. அதன்படி, பொது பிரிவினருக்கான தகுதி சதவீதம் 50ல் இருந்து 7 ஆகவும் (103 மதிப்பெண்), இடஒதுக்கீடுப் பிரிவினருக்கான தகுதி சதவீதம் 40ல் இருந்து பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டது. இதனால், மொத்த மதிப்பெண் 800க்கு மைனஸ் 40 மதிப்பெண் பெற்றவர்கள் கூட 3ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க வழிவகுத்தது.
மருத்துவ தேர்வு வாரியத்தின் இந்த முடிவை டாக்டர்கள் சங்கங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் ஹரிஷரன் தேவ்கான் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கட்ஆப் குறைப்பு அரசியலமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 21வது பிரிவுகளை மீறுவதாக உள்ளது. தேர்வு செயல்முறை தொடங்கிய பிறகு தகுதி வரம்புகளை மாற்ற முடியாது. முதுகலை மருத்துவக் கல்வியை வணிக செயலாக கருத முடியாது.
மேலும் தரநிலைகள் நீர்த்துப் போவதை தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘விதிவிலக்கான காரணங்களை தவிர முதுகலை சேர்க்கைகளில் மதிப்பெண்களை தளர்த்த முடியாது. முதுகலை மட்டத்தில் தரநிலைகள் கடுமையாக இருக்க வேண்டும்’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘ஒருபுறம் மருத்துவ இடங்கள் வீணாகாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். மறுபுறம், போதுமான மாணவர் சேர்க்கை இல்லை என்பதால் தகுதி மதிப்பெண் வரம்பை குறைக்குமாறு அழுத்தம் வருகிறது. இதில் தகுதி மதிப்பெண்களை குறைத்தால் தரநிலைகள் குறைக்கப்படுகின்றன என்ற வாதம் எழும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் மருத்துவ இடங்கள் வீணாகின்றன என்ற எதிர்வாதம் முன்வைக்கப்படும்.
எனவே எங்காவது ஒரு சமநிலை இருக்க வேண்டும். எனவே நீட்-பிஜி நுழைவுத்தேர்வில் கட் ஆப் மதிப்பெண் வரம்பை அதிரடியாக குறைத்ததற்கான காரணத்தை விளக்கி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என கூறி, ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய மருத்துவ தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
