×

சேவைத் துறையில் பெரும் பாதிப்பு; ஐடி நிறுவனங்களை கதிகலங்க வைத்த புதிய ஆந்த்ரோபிக் ஏஐ: முன்னணி நிறுவன பங்குகள் சரிவு

புதுடெல்லி: ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய கிளவுட் ஏஐ கருவியின் அறிமுகத்தால் ஐடி நிறுவனங்கள் கதி கலங்கிப் போயுள்ளன. இதன் காரணமாக பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாக முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இது பாரபட்சமின்றி அனைத்து துறைகளிலும் கால் பதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதை உணர்த்தும் வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது புதிய கிளவுட் ஏஐ மாடலுக்காக கிளவுட் கோஒர்க் மற்றும் 11 புதிய பிளக்இன்களை அறிமுகப்படுத்தியது.

இந்த ஏஐ டூல், நிறுவனங்களுக்கு தேவையான அத்தனை பணிகளையும் தானியங்கிமயமாக்கும். குறிப்பாக, சட்ட விளக்கங்கள், சட்ட ஒப்பந்தங்களையும் இந்த ஏஐ துல்லியமாக வழங்கிவிடும். விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை தானியக்கமாக்கும் திறன் கொண்டவை. இதுதவிர ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்தல், நிதி மாதிரிகளை உருவாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.

இந்த சேவைகளை ஐடி நிறுவனங்கள் பல லட்சம் பணம் பெற்று பலரை வைத்து செய்து தரும் நிலையில், சில நிமிடங்களில் ஆந்த்ரோபிக் ஏஐ செய்து முடிக்கிறது. இதனால் அமெரிக்க ஐடி நிறுவனங்களின் பங்குகள் மட்டுமின்றி இந்திய ஐடி துறைகளிலும் பெரும் அதிர்வுகள் உருவாகி உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் பங்குகள் 7 சதவீத சரிவை கண்டது.

இன்போசிஸ், எச்சிஎல், மகேந்திரா, விப்ரோ பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன. எச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் குறைந்தது. ஆந்த்ரோபிக்குடன் ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற ஏஐ நிறுவனங்களும் போட்டி போடுவதால் ஐடி சேவைத் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

* ஒயிட் காலர் வேலையில் 50% காணாமல் போகும்
ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கூறுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் இதற்கு முந்தைய தொழில்நுட்ப புரட்சிகளை காட்டிலும் ஏஐயின் தாக்கங்கள் ஆழமாகவும் வேகமாகவும் இருக்கும். எனது கணிப்புப்படி ஏஐ வரவால், 50 சதவீதம் என்ட்ரி லெவல் ஒயிட் காலர் வேலைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இல்லாமல் போய் விடும். அடுத்த 5 ஆண்டுகளில் நம்மிடம் சக்திவாய்ந்த ஏஐ மாடல் இருக்கும்’’ என்றார்.

Tags : New Delhi ,Anthropic ,
× RELATED நீட்-பிஜி கட் ஆப் மதிப்பெண் குறைப்பு...