‘புன்னகையை தேடி’ திட்டத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

தேனி, பிப்.3: சின்னமனூர் பகுதியில் ஒர்க் ஷாப்புகளில் வேலை பார்த்த 7  குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் தெருவோரம் வாழும் குழந்தைகள், இடம்பெயர்ந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு மீட்கும்  நோக்கத்தில் புன்னகையை தேடி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் புன்னகையை தேடி  நிகழ்ச்சி நேற்று  நடத்தப்பட்டது. தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர்   வக்கீல் சுரேஷ் குமார், தேனி  சைல்டு லைன் இயக்குனர்  முஹம்மது ஷேக் இப்ராஹிம், சின்னமனூர் எம்எம்எஸ் நிர்வாக இயக்குனர் தேவானந்த பிரபு, மாவட்ட நன்னடத்தை அலுவலர் அன்னலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் கிரிஜா, தொழிலாளர் நல ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து வக்கீல் சுரேஷ்குமார் தலைமையில் குழுவினர் சின்னமனூர் பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் ஒர்க் ஷாப்புகளில் பணிபுரிந்த 7 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டனர். குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தை நலக்குழு அலுவலத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தைகளை பணிக்கு அமர்த்திய ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய குழந்தைகள் நலக்குழு போலீசுக்கு பரிந்துரை செய்தது.

Related Stories: