×

நாய்கள் கடித்து குதறியதில் மான் 3 மணி நேரம் உயிருக்கு போராடி பலி: வனத்துறை நடவடிக்கையில் மெத்தனம்

 

திருத்தணி: திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் காப்புக் காட்டிலிருந்து உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 10க்கும் மேற்பட்ட மான்கள், வாகனங்களில் அடிபட்டும் நாய்களின் கடியில் சிக்கி இறந்துள்ளன. இந்நிலையில், பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நேற்று 2 வயது நிரம்பிய ஆண் மான் ஒன்று, நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்து, சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் உயிருக்கு போராடியதில் பரிதாபமாக பலியானது.

இதுபற்றி திருத்தணி வனத்துறை அலுவலகத்துக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும், சம்பவ இடத்துக்கு மிக தாமதமாக வனத்துறை அதிகாரிகள் வந்ததால், அந்த மானை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தாமதமாக கால்நடை மருத்துவருடன் வந்த வனத்துறை அதிகாரிகள், அங்கு இறந்துபோன மானுக்கு பிரேத பரிசோதனை நடத்தி, அங்கேயே புதைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, காப்பு காட்டிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள், வாகன விபத்து மற்றும் நாய்க்கடிகளில் இறந்து வருவதை தடுக்க, காப்பு காட்டு பகுதியில் வேலி அமைத்து, அங்கு மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகளின் தேவைக்கு உணவு மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதற்கு தமிழக அரசு மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Department ,Tiruttani ,Peerakuppam Primary Health Center… ,
× RELATED குடிநீர் பாட்டிலில் மைக்ரோ...