×

இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 20 அணிகள் பங்கேற்பு

 

மும்பை: 10வது ஐசிசி ஆடவர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. லீக் சுற்றில் ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, பி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே, சி பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாள், ஸ்கார்ட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், டி பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா, யுஏஇ இடம்பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது. பிப். 20ம் தேதி வரை லீக் சுற்று நடக்கிறது. சூப்பர் 8 சுற்று பிப்.21ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மார்ச் 4ம்தேதி முதல் அரையிறுதி, 5ம்தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும். இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8ம் தேதி நடத்தப்படும். லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.

நாளை முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்து மோதுகின்றன. மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்து மோத உள்ளன. இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, அமெரிக்காவுடன் மோத உள்ளது. போட்டிகள் அனைத்தையும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி ஒளிபரப்பு செய்கிறது.

கொழும்பு செல்ல டிக்கெட் போட்டாச்சு…
மும்பை மற்றும் கொழும்பில் நேற்று கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மும்பையில் நடந்த சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் அளித்த பேட்டி: “எங்களுடைய மனநிலை மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானுடன் ஆட மாட்டோம் என்று நாங்கள் சொல்லவே இல்லை.அந்தப் பக்கம் இருந்துதான் மறுப்பு வந்துள்ளது. ஐசிசி எங்களுக்கு ஒரு அட்டவணையைத் தந்துள்ளது. அரசாங்கமும் பொதுவான இடத்தில் விளையாட ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் நாங்கள் விளையாடத் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. நாங்கள் அங்குச் செல்கிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம், என்றார்.

Tags : 10th ICC T20 World Cup Series ,India ,Sri Lanka ,Mumbai ,ICC Men's T20 World Cup Cricket Series ,
× RELATED U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சதம்...