×

நாடாளுமன்ற சர்ச்சைக்கு மத்தியில் நேரு குடும்பத்தின் ஊழல் ஆவண காப்பகம்: புதிய நூலகம் அமைக்க பாஜக எம்பி திட்டம்

 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் வகையில் புதிய நூலகம் அமைக்கப்பட உள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே நீண்ட காலமாக நேரு, இந்திரா காந்தி குடும்பத்தின் மீது பல்வேறு புகார்களை கூறி வருகிறார். முன்னதாக அமெரிக்காவின் ரகசிய தகவல்கள் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து அவர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

தற்போதைய பட்ெஜட் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, நேரு குடும்பத்தின் வரலாற்றுப் பிழைகளை விளக்கும் புத்தகங்களை காட்டி அவர் ஆவேசமாக பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இத்தகைய குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு ஒரு குடும்பத்தை குறிவைப்பதாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வெளியிட்ட புதிய அறிவிப்பில், ‘நேரு – இந்திரா காந்தி குடும்பத்தின் நிர்வாக தோல்விகள், ஊழல் மற்றும் கொள்கை முடிவுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆவணப்படுத்த தனி நூலகம் அமைக்கப்படும். மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் காங்கிரஸ் குடும்பத்தின் நாட்டிற்கு இழைத்த தீங்குகளை விரிவாக படிக்க இந்த நூலகம் ஒருங்கிணைந்த ஆதார மையமாக செயல்படும். இதற்காக பொதுமக்களிடம் இருந்து புத்தகங்கள், அதிகாரப்பூர்வ ரகசிய ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்க வேண்டும்’ என்றார்.

நாடாளுமன்றத்தில் அவர் பேசிய கருத்துக்கு பாஜகவினர் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, ‘அடுத்த தலைமுறைக்கு உண்மையை கொண்டு செல்ல இந்த நூலகம் அவசியம்’ என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags : Nehru ,BJP ,New Delhi ,Congress party ,Nishikant Dubey ,Indira Gandhi ,
× RELATED ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும்...