புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், அவர் அவைக்கு வந்தால் அசம்பாவிதம் நிகழக்கூடும் என்பதால், அவரிடம் வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பிப்.2ம் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசும் போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனா ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது மைக் அணைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பேச இருந்தார். ஆனால் திடீரென பிரதமர் உரையாற்றவில்லை. நேற்று காலையும் மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அவையை பகல் 12 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். இருப்பினும் அமளி அடங்காததால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளிக்காமல் குரல் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். தொடர்ந்து மாலை 5 மணி வரை அவையை அவர் ஒத்தி வைத்தார். அப்போது பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்ததாக அவர் அவையில் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மக்களவையில் சில எம்பிக்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டனர். இது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. வரலாற்றில் இதற்கு முன்பு கண்டிராத ஒரு நடத்தையை புதன்கிழமை சில உறுப்பினர்கள் சபையில் வெளிப்படுத்தியதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் ஒருபோதும் அரசியல் வேறுபாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டதில்லை. அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தை பொருத்தமானதல்ல. உண்மையில் அது ஒரு கரும்புள்ளி போன்றது.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வரும்போது, காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் பிரதமர் அமர்ந்திருக்கும் இருக்கையை முற்றுகையிடுவதன் மூலம் எதிர்பாராத செயலைச் செய்ய முடியும் என்ற உறுதியான தகவல் எனக்கு கிடைத்து இருந்தது. இந்த சம்பவம் நடந்திருந்தால், இது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்திருக்கும். இதை தவிர்க்க, பிரதமரை சபைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.
சபாநாயகராக சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவது எனது பொறுப்பு. எனது வேண்டுகோளை ஏற்று, புதன்கிழமை சபைக்கு வராமல் மக்களவையில் விரும்பத்தகாத காட்சிகளை தவிர்த்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களைக் கொண்டு வந்தால், அவை செயல்படாது. இவ்வாறு கூறிய அவர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் எம்பிக்கள் அபத்தமான அவதூறை அள்ளி வீசுவதாக தெரிவித்துள்ளனர்.

* ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமர் மோடி பதிலளிக்காமல் மக்களவையில் நிறைவேற்றம்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமர் மோடி பதிலளிக்காமல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் பிரதமர் பதவி ஏற்ற பிறகு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளிக்காமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்திய போதும் பிரதமர் மோடி அவையில் இல்லை.
* சபாநாயகர் சொல்வது பொய் பிரியங்கா கடும் தாக்கு
சபாநாயகர் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,’ இது ஒரு முழுமையான பொய். பிரதமரின் மீது யாரும் கைகளை உயர்த்துவது, அவரை காயப்படுத்த முயற்சிப்பது அல்லது இதுபோன்ற எதையும் செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. சபாநாயகர் சொல்வது முற்றிலும் தவறு.
ஆனால் உங்கள் உறுப்பினர்களை மட்டும் புத்தகங்களை மேற்கோள் காட்டவும், முட்டாள்தனமாகப் பேசவும் அனுமதிக்கப் போகிறீர்கள் என்றால், எதிர்க்கட்சி எம்பிக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது உறுதி. மன்னிக்கவும், பிரதமர் மோடி, சபாநாயகரின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவைக்குள் வர தைரியம் இல்லாததால், சபாநாயகரை இதையெல்லாம் சொல்ல வைக்கிறார்கள்…
ஏனெனில் மூன்று பெண்கள் தான் அவரது இருக்கைக்கு முன் நின்று கொண்டிருந்தார்கள். அப்படி நிற்க கூடாதா என்ன? அப்படியானால் இந்த புகார் என்ன முட்டாள்தனம். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் பேச அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும். பொது ஆதாரத்தை மேற்கோள் காட்டுவதை தடுக்க அவர்களிடம் ஏதேனும் அடிப்படை விதி உள்ளதா’ என்று கேள்வி எழுப்பினார்.
* ஆளும்கட்சியினரை தாக்க திட்டமிட்டனர்: கிரிராஜ்சிங்
மக்களவையில் ஆளும்கட்சி உறுப்பினர்களை தாக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருந்தனர் என்று ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,’ பிரதமர் மோடி பேசும் மாலை 5 மணி ஆனவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளே வந்தனர். முதல் முறையாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்கள் இருக்கைகளுக்கு முன்னால் நிற்பது தெரிந்தது. எனவே அதுதான் தாக்குவதற்கான வழி, வேறு எதுவும் இல்லை. அவர்கள் அந்த திட்டத்தை முன்கூட்டியே தயாராக வைத்திருந்தார்கள்’ என்றார்.
* 2004ல் மன்மோகன்சிங் 2026ல் பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகள் மோதல் காரணமாக 2004 அன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மன்மோகன்சிங்கை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன. அதே சம்பவம் நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு நடந்தது. மோடி பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
