புதுடெல்லி: இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி குறித்த கூட்டு அறிக்கை இறுதி செய்து மார்ச் மாதம் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு இந்திய பொருட்களுக்கு 50 % வரியை விதிப்பதாக அறிவித்தார்.இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
கடந்த இரண்டாம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கூறுகையில்,‘‘ இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி குறித்த கூட்டு அறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் கையெழுத்திடும்.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா விதித்த வரிகள் 18 சதவீதமாகக் குறையும். இதன் இறுதி ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்ட பின்னர் இந்தியா மீதான வரிகளை 18% குறைப்பது குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்கா வெளியிடும்.தற்போது, இந்தியப் பொருட்கள் 25 % பரஸ்பர வரியையும், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு 25 % கூடுதல் வரியையும் விதிக்கின்றன. ஒப்பந்தத்தின் முதல் பகுதிக்கான சட்ட ஒப்பந்தம் மார்ச் மாதத்தின் நடு பகுதியில் கையெழுத்தாகும்.
கூட்டு அறிக்கையைத் தொடர்ந்து முழுமையான சட்ட ஒப்பந்தம் வெளியிடப்படும்’’ என்றார். ஒன்றிய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில்,’மார்ச் மாதத்தில், சட்டப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதன்பின் இந்தியா மற்ற நாடுகளிடமிருந்து வாங்கும் எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி, விமானம், ஐசிடி தயாரிப்புகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் தரவு மைய உபகரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் அமெரிக்கா வழங்க முடியும்’ என்றார்.
