×

மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: பாஜ ஆளும் மாநிலங்களில் தலைகீழ்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், இதில் பாஜ ஆளும் மாநிலங்களில் அதிகம் என்றும், அதே சமயம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மூடப்பட்ட அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் புதிதாக திறக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்தும் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்தும் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 2020-21ம் ஆண்டில் 10,32,049 ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25ம் ஆண்டில் 10,13,322 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில், பாஜ ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 6,902 பள்ளிகளும், அசாமில் 2,008 பள்ளிகளும், ஒடிசாவில் 1,631 பள்ளிகளும் , மகாராஷ்டிராவில் 850 பள்ளிகளும், குஜராத்தில் 329 பள்ளிகளும், பீகாரில் கடந்த ஓராண்டில் 1,800 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஜம்மு – காஷ்மீரில் 4,382 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அதே சமயம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2020-21ம் ஆண்டில் 37,589 பள்ளிகள் இருந்த நிலையில், 2024-25ம் ஆண்டில் 37,626 பள்ளிகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளிலேயே அதிகளவில் 2023-24 கல்வி ஆண்டில் 37,672 பள்ளிகள் செயல்பட்டன. மாநிலங்கள் அளவில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 11வது இடத்தில் இருந்ததாக கருதப்படுகிறது.

இதே போல, மற்ற மாநிலங்களில் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2020-21ல் 12,402 தனியார் பள்ளிகள் இருந்த நிலையில், 2024-25ல் 11,890 ஆக 512 பள்ளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை 3,40,753ல் இருந்து 3,39,583 ஆக சரிந்துள்ளது.

1,170 பள்ளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அசாம், பீகார், சட்டீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் பள்ளிகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு மாணவர் சேர்க்கை விகிதத்திலும், கல்வித் தரத்திலும் முன்னணி மாநிலமாக திகழ்வதாக ஏற்கனவே பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags : Union government ,Rajya Sabha ,Tamil Nadu ,BJP ,New Delhi ,Rajya Sabha… ,
× RELATED 800 கற்றல் மையங்களை உருவாக்கிய இந்திய ஆசிரியைக்கு ரூ.8.5 கோடி பரிசு