அதிமுகவில் கூட்டணியில் சேர்ந்துள்ள பாஜ அதிக தொகுதிகளையும், தாங்கள் விரும்பும் தொகுதிகளையும் கொடுத்தாக வேண்டுமென்று குடைச்சல் கொடுத்து வருவதால் அதிலுள்ள மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளும் தங்கள் ெதாகுதியை பிடித்துக் கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மற்ற தொகுதிகளிலும் அதிமுகவில் போட்டியிடுபவர்கள் அங்குள்ள மாஜி அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.
அதன்படி, விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் படுதோல்வியடைந்ததால் இந்த முறை மயிலம் தொகுதிக்கு ஓட்டம்பிடித்து அங்கு போட்டியிட அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் அதிமுகவில் காலியாக உள்ள விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 20க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
சீட்டுக்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது சகோதரரை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம். இதனை அறிந்த மாஜி அமைச்சரும், அவரது சகோதருரம் சீட்டு கேட்டவர்களை கட்சி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, ‘‘விழுப்புரம் தொகுதியில் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். சீட்டு வேணும் என்பவர்கள் ரூ.15 கோடியை கண்ணில் காட்டுங்கள். அவர்களுக்கு சீட்டு நிச்சயம் கொடுப்போம்.
இல்லையென்றால் நாங்கள் செலவு செய்யும் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து வைத்திருக்கிறோம்’ என்று ஓபனாக பேசி இருக்கிறார்களாம். 5 கோடின்னா பரவாயில்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வதென்று விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் பலரும் பின்வாங்க தொடங்கி இருக்கிறார்களாம். ஜெயலலிதா இருக்கும்போது தேர்தலுக்கு கொட்டிக் கொடுப்பாங்க, சீட்டு கிடைச்சாலே போதும்.
ஆனால் இன்று பணத்தை கண்ணில் காட்டினால்தான் சீட்டு கொடுப்பேன் என்கிறார்கள். கட்சி தலைகீழா மாறியிருக்கே என்று தற்போதைய தலைமையை புலம்பி தள்ளி வருகிறார்களாம். விழுப்புரம் தொகுதியில் ரூ.15 கோடி செலவு செய்யும் வேட்பாளர் ஒருவரை மாஜி அமைச்சர் தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறிய நிலையில் அவர் யார் என்றும் தெரியாமல் சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார்களாம். எப்படியும் வெளியூரிலிருந்துதான் அழைத்து வரப்போகிறார்கள். தேர்தல் வேலைக்கு அழைக்கும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று விழுப்புரம் தொகுதி அதிமுகவினர் கூறி வருகிறார்களாம்.
