- அண்ணா பல்கலைக்கழகம்
- அமைச்சர்
- கோவி
- செஜியான்
- சென்னை
- உயர்கல்வி அமைச்சர்
- பட்டமளிப்பு விழா
- கிண்டி கல்லூரி
- பொறியியல்
- அண்ணா
- பல்கலைக்கழக
- விவேகானந்தா அரினா, சென்னை
சென்னை: உயர்கல்வியின் கிரீடமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இன்று (05.02.2026) சென்னை, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 841 மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர்; உயர்தர தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
மேலும், இது நாட்டின் பழமையான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி 1794ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். 4 பல்கலைக்கழகத் துறைகள், 16 தொகுதிக் கல்லூரிகள் மற்றும் 476 இணைப்புக் கல்லூரிகளை உள்ளடக்கியது. மேலும், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி) மற்றும் SAP வளாகங்களில் உள்ள 36 துறைகளால் 32 இளங்கலை மற்றும் 88 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. கிண்டி பொறியியல் கல்லூரியில் 1,876 மாணாக்கர்கள் பயில்கின்றனர். அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 516 மாணாக்கர்கள் பயில்கின்றனர்.
கட்டட கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் 102 மாணாக்கர்கள் பயில்கின்றனர். மெட்ராஸ் தொழில்நுட்ப கழகத்தில் 894 மாணாக்கர்கள் பயில்கின்றனர். உலகளவில் 2026ஆம் ஆண்டுக்கான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், 465 வது இடம்; இந்தியப் பல்கலைக்கழகங்களில் 10வது இடம். டைம்ஸ் உயர் கல்வியின் (THE) பல்துறை சார்ந்த அறிவியல் தரவரிசை 2025 இல், இந்தியாவில் முதலாவது இடம்; உலகளவில் 42 வது இடம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசைப் பட்டியல் 2025 இல் மாநில பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடம். NIRF, புதுமைப் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 9 வது இடம். ஆராய்ச்சி நிறுவனங்களில் 2 வது இடம். இந்தியாவில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் 20வது இடம்.
இவ்வாறு பல்வேறு தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை இடத்தை பிடித்து, நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு உயர்கல்வியின் கிரீடமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று சொன்னால் மிகையாகாது. மையப்படுத்தப்பட்ட ஆய்வக வசதிகள், செயற்கை நுண்ணறிவு தளங்கள், மின்னணு-வளங்களை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு ரூ. 1,380.20 கோடி வழங்கியுள்ளது. 2024-2025 கல்வியாண்டில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 1,50,495 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். 584 மாணவர்கள் முன்னணி தொழில்துறை நிறுவனங்களில் பயிற்சி பெற்றனர்.
பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்புப் பிரிவின் மூலம் 256 உயர்தர நிறுவனங்களில் 1,339 மாணவர்கள் அதிகபட்சமாக ரூ. 53 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உலகளாவிய வெளிப்பாட்டையும் சர்வதேச அளவில் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக, ஜெர்மன், ஜப்பானிய, ஸ்பானிஷ், கொரிய மற்றும் தைவானிய மாண்டரின் மொழிகளில் வெளிநாட்டு மொழிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத்தின் (CMRG) கீழ், ஆசிரியர்களுக்கு 79 ஆராய்ச்சி திட்டங்களும், மாணவர்களுக்கு 6 ஆராய்ச்சி திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) மற்றும் கூட்டு காற்றாலைகளின் மறுசுழற்சி ஆகிய இரண்டு திட்டங்களுக்காக ரூ.18.66 கோடி பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் 220 h-குறியீடு பெற்றுள்ளனர். பல்கலைக்கழகம் தாக்கல் செய்த 89 காப்புரிமைகளில், 69 மானியங்களைப் பெற்றுள்ளது. தேசிய உயர் கல்வித் திட்டம் (RUSA) 2.0 திட்டத்தின் கீழ், மொத்தம் 815 மாணவர்களின் பங்கேற்புடன் 20 உயர்தர திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ₹35 கோடி நிதிக் கொடையுடன் மின்சார வாகன தொழில்நுட்பங்கள்-சாமர்த்தியமான பொருள் பண்புகள், உற்பத்தி மற்றும் கட்ட மேலாண்மை என்ற தலைப்பில் திட்டம் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக மேம்பாட்டிற்காக, புதிய ஆராய்ச்சி பூங்கா மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இப்பட்டமளிப்பு விழாவில் கிண்டி பொறியியல் கல்லூரியினை சேர்ந்த 348 பெண்கள் மற்றும் 493 ஆண்கள் என மொத்தம் 841 இளநிலை மாணாக்கர்கள் பட்டம் பெறுகின்றனர். 2024-25ஆம் கல்வியாண்டில் (அண்ணா பல்கலைக்கழக 4 உறுப்பு கல்லூரிகளையும் சேர்த்து) அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறுபவர்கள் 1,834 முதல் தலைமுறை பட்டதாரிகள். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 619 மாணவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 1,05,000 மாணாக்கர்கள் திறன் பயிற்சி பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 470 மாணவிகள், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 416 மாணவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,464 மாணாக்கர்களுக்கு 15. 6.33 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணாக்கர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,805 மாணாக்கர்களுக்கு ரூ. 71.90 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 518 மாணாக்கர்களுக்கு ரூ.3.73 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மடிக்கணினி திட்டத்தின் கீழ் 1,028 மாணாக்கர்கள் பயன் பெறவுள்ளனர். மேலும், இன்று பட்டம் பெற்ற மாணாக்கர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பெற்றோர்களை பெருமைப்படுத்தி வாழ்வில் சாதிக்க என்னுடை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
