சென்னை: அங்கன்வாடி மையங்களுக்கு 2026 மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு 31 நாட்களும் கோடை விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் கோடை விடுமுறை வழங்கியும், அவ்வாறு குழந்தைகள் மையங்களில், கோடை விடுமுறை வழங்கப்படும்
மே மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும், மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும், நான்காவது வாரம் அருகிலுள்ள குழந்தைகள் குறு மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் மாற்றுப் பணியில் பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும் பொழுது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும் பொழுது அரசின் கொள்கை முடிவின்படி ஆண்டு முழுவதும் குழந்தைகள் மையங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக் காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் மையக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர், வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் (THR) மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்க அனுமதி அளித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது போன்று இவ்வாண்டும் குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் 01ம் தேதி முதல் 31ம் நாள் முடிய 31 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
