×

திருமங்கலம் அருகே டூவீலர் மீது கார் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருமங்கலம், பிப். 5: மதுரை, திருப்பரங்குன்றத்தை அடுத்த பாரைபத்தியை சேர்ந்தவர் பூசாரி. இவரது மனைவி மாரியம்மாள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் பூசாரி உயிரிழந்தார். மாரியம்மாள் இரு மகன்கள், மகளுடன் வசித்து வருகிறார். வரும் பிப்.8ம் தேதிநடைபெறும் இல்ல விழாவிற்கான அழைப்பிதழ்களை மாரியம்மாளும், அவரது மகன்களும் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் இரண்டாவது மகன் சந்திரகுமார்(18), அவரது நண்பர் பாரைபத்தியை சேர்ந்த நிசாந்த் ஆகியோர் நேற்று முன்தினம் அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். இதன்படி மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள எலியார்பத்தி டோல்கேட் அருகே இருவரும் வந்தபோது மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்ற கார் இவர்களின் டூவீலர் மீது மோதியது.

இதில் சாலையின் சென்டர் மீடியனில் விழுந்த இருவரும் படுகாயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சந்திரகுமார் உயிரிழந்தார். நண்பர் நிசாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த கார் டிரைவர் மணியை தேடிவருகின்றனர். தந்தை போலவே மகனும் வாகன விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Thirumangalam ,Paraipathi ,Thiruparankundram, Madurai ,Mariammal ,
× RELATED தூய்மை காவலர்கள் தமிழக அரசுக்கு நன்றி