ஏமாற்றம் தரும் மத்திய அரசு பட்ஜெட் மின்விநியோகம் தனியார்மயத்தால் மின்கட்டணம் பல மடங்கு உயரும் மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் கருத்து

தேனி, பிப். 2: மத்திய அரசு பட்ஜெட்டில் மின்விநியோகம் தனியார்மயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், மின்நுகர்வோருக்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு பட்ஜெட் குறித்து, தேனி மாவட்ட மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் திருமுருகன் கூறியதாவது: மத்திய அரசு மக்களுக்கு சேவையாற்றும் பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மின்விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களாகிய நுகர்வோர் பெரும்பாதிப்பை சந்திக்க நேரிடும். மின்வினியோகம் தனியார்மயம் என்கிறபோது, சேவை மனப்பான்மையோடு அரசு குறைவாக மக்களிடம் வசூலிக்கும் மின்கட்டணம் பல மடங்கு உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் வணிக ரீதியிலான மின்கட்டண உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். இதன்காரணமாக நுகர்பொருள் விலை உயரும். இதனால், நுகர்வோர் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இலவசமாக அரசு வழங்கும் விவசாயத்திற்கான மின்சாரம், குடிசை வீடுகளுக்கான மின்வினியோகம் ரத்தாகும் அபாயம் உள்ளது. எனவே, நுகர்வோரை பாதிக்கச் செய்யும் மின்வினியோக தனியார்மயத்தை கண்டிப்பதாக தெரிவித்தார்.

திண்டுக்கல் சபரிமலை அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது: திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சபரிமலை வரை ரயில் பாதை அமைக்க பெரும் தொகை தேவைப்படும் என்பதால் இத்திட்டத்தை திண்டுக்கல்-லோயர்கேம்ப் மற்றும் லோயர் கேம்ப்-சபரிமலை என இரண்டாக பிரித்து, முதலில் திண்டுக்கல்லில் இருந்து லோயர்கேம்ப் வரை ரயில் பாதை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் போராட்ட குழு கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கப்படாதது தேனி மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பினை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கும் மத்திய அரசு திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரயில் பாதை குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது’ என்றார்.

Related Stories: