ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கிராமக் கோயிலில் திடீரென வைத்த சிலைகளை மீட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த போலீசார், சிலைகளை வைத்தவர்களை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள தென்னமங்கலம் கண்மாய்க் கரையில் ஒரு சமூகத்திற்கு சொந்தமான கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று திடீரென மாரியம்மன் மற்றும் சூலாயுதம் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தாங்கள் எதுவும் சிலை வைக்கவில்லை என்றனர்.
இது குறித்து தகவலின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இரண்டு சிலைகளையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன. யார் கொண்டு வந்து வைத்தது? வேறு கோயில்களில் இருந்து திருடி கொண்டு வரப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கிராமக் கோயிலில் திடீரென தோன்றிய சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
