×

மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் அரசு மருத்துவமனை டாக்டர் தற்கொலை

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், தனது மகளை பார்க்க சென்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டருக்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சலில் நேற்று தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு டாக்டராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளனர். இவரது மனைவி டாக்டராகப் பணியாற்றுவதுடன், கேரளாவில் மருத்துவ உயர்படிப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே டாக்டர் கார்த்திக்கும் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், அவரது மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு தனது 3 வயது மகளை பார்க்க டாக்டர் கார்த்திக் ஊருக்குச் சென்றிருக்கிறார். எனினும் அவர், தனது மகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்க மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் கார்த்திக் மனமுடைந்து செங்கல்பட்டுக்கு திரும்பியுள்ளார். அன்று முதல் டாக்டர் கார்த்திக் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது வீட்டின் படுக்கையறையில் டாக்டர் கார்த்திக் கடும் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் விரைந்து வந்தனர். அங்கு டாக்டர் கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி, அவர் வேலை பார்த்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chengalpattu ,Chengalpattu.… ,
× RELATED FORCIP-500, Cetezon மாத்திரைகள்: புதுச்சேரி மருந்தகங்களில் விற்பனை செய்ய தடை