×

பாஜ தலைவர் நயினாருடன் மோதல் தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை ஓட்டம்: சட்டமன்ற தேர்தலிலும் போட்டியில்லை?

கோவை: பாஜ மாநில தலைவர் நயினாருடன் மோதல் காரணமாக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகி உள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் முடிவையும் அவர் கைவிடு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் ஒரு அடிமைக் கட்சி. காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே விஜய்யை பார்த்து பேசினேன் என்று கூறுபவரை, தமிழக காங்கிரஸ் தலைவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. அதற்கும் அவர் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறுகிறார். இதுதான் அடிமை கட்சி. எதிராக பேசுபவரை கூட அவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியது பச்சை பொய். பத்திரிகைகளில் எழுதுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால், அதற்கு மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.

கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நான் அதிகமாக கோவையில் இருக்கிறேன். அவர் டயாலிசிஸில் இருக்கிறார். அவரை பார்த்து கொள்வது எனது முதல் கடமை. எனவே, அடிப்படை வேலைகள் பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. அதிகமாக பயணம் செய்ய முடியாது. கட்சியும் அதை ஏற்றுக்கொண்டு வேறு, வேறு பொறுப்பாளர்களை போடுவார்கள். பாஜ வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என கட்சி சொல்கிறதோ, அதை செய்வேன். இப்போதைக்கு அதிகம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் சம்மந்தப்பட்ட நேரத்தில் தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என கட்சி சொல்லட்டும். அதன் பிறகு நான் பேசுகிறேன்.

சிங்காநல்லூர் உட்பட் 6 தொகுதிகளுக்கும் வேறு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தனிப்பட்ட இலக்கு என எதுவும் இல்லை. அதற்கு நாங்கள் பாடுபடுவோம். கட்சியை பொறுத்தவரை அண்ணாமலையும் ஒரு தொண்டன் தான். அதனால் கட்சி சொல்வதை கேட்க கடமையுள்ளது. நான் ஐ.பி.எஸ் ஆபீஸர் ஆகவே இருந்து இருக்கலாம் என்று நான் கூறவில்லை. சில நேரங்களில் நான் ஒற்றைப் பென்குயின் போல இருப்பதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் 72 பாஜ நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, விருகம்பாக்கம், பத்மநாபபுரம், ஸ்ரீ வைகுண்டம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் நேற்று தெரிவித்தார். இது பாஜவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே உட்கட்சி மோதல்கள் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக கட்சியில் அண்ணாமலைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல, வானதி சீனிவாசனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், இருவரது ஆதரவாளர்களும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும், அண்ணாமலை தலைகாட்டாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அண்ணாமலையின் சொத்து குவிப்பு விவகாரங்கள் வெளியானதற்கும் உட்கட்சியினரே காரணம் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.

அந்த விவகாரங்களில் பாஜ ஆதரவாளர்களே அண்ணாமலைக்கு எதிராக பேசிய போது, பாஜ தலைவர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்காததால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில், அண்ணாமலையிடம் கலந்து ஆலோசிக்காமலும், தேசிய அளவில் பிரபலமாக உள்ள தன்னை வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்ததும், அதிலும் வேறு, வேறு மாவட்டங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமித்தததும் கடும் மன வருத்தத்தை தந்ததால், அண்ணாமலை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பாஜவினர் இடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதும், பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தொகுதிகளில் தோல்வியடைந்தால் தனது இமேஜ்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் தந்தை உடல் நலத்தை காரணம் காட்டி தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படுகிறது.

இதனால், தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் அண்ணாமலை, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகமும் பாஜவினர் இடையே எழுந்துள்ளது. அண்ணாமலைக்கு எதிராக உள்ள வானதி சீனிவாசன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் அணிகள் அவருக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்யாமல் தோற்கடிக்க முயலலாம் எனவும், அதிமுக தலைவர்களை இழிவாக பேசியது, எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனம், அதிமுக கூட்டணிக்கு எதிராக பேச்சு உள்ளிட்டவைகளை மனதில் வைத்து அக்கட்சியினரும் சதி செய்ய வாய்ப்பு இருக்கலாம் எனவும் கூறப்படுவதால், தேர்தல் போட்டியில் இருந்து விலகலாம் என்ற முடிவிற்கு அண்ணாமலை வந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மாநில தலைமை மீதான தனது அதிருப்தியை பகிரங்கமாக தேசிய தலைமைக்கு வெளிப்படுத்தும் வகையில் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

* அண்ணாமலை ஆசை: நயினார் வேட்டு
அண்ணாமலையை பதிவியில் இருந்து தூக்கிய பின்பு, பாஜவில் அவர் மேலே வந்துவிட கூடாது என நயினார் கண்ணும் கருத்துமாக இருந்தார். இருவரும் அண்ணன்- தம்பி என வெளியே அழைத்துகொண்டாலும் உள்ளே மோதல் போக்கு இருந்து தான் வந்தது. அண்ணாமலையை பொருத்தவரையில் எம்எல்ஏ, எம்.பி. தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார். அவரது திட்டமே முதல்வர் பதவி மீது தான் இருந்து வருகிறது. தற்போது, எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் அவரது கூட்டணியில் இருக்கும் பாஜக, அன்புமணி, தினகரன் ஆகியோர் கூட்டணி ஆட்சி என்று கூறி வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமியை ஏமாற்றி கூட்டணி சேர்ந்து விட்டு, பின்னர் அவரை மிரட்டி பணிய வைக்கும் திட்டத்தையும் பாஜக கையில் ரகசியமாக வைத்துள்ளது. இது தினகரன், அன்புமணி, அண்ணாமலை ஆகியோருக்கு நன்றாக தெரியும்.

இதையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்து விடவேண்டும் என்பதில் அண்ணாமலை தீவிரமாக இருந்தார். அவ்வாறு உள்ளே செல்லும் போது முதல்வர் பதவியையும் பிடித்துவிடலாம் என்பது தான் அவரது திட்டமாக இருந்தது. ஆனால் கூட்டணி மந்திரி சபை வரும் நேரத்தில், முக்கிய பதவியை பிடித்துவிடவேண்டும் என்பது தான் நயினாரின் ஆசையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அண்ணாமலையின் பிளானை தெரிந்து கொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதியின் பொறுப்பாளர் பதவியை வழங்கி, அவரது சட்டசபைக்குள் நுழையும் ஆசைக்கு அணை கட்டினார். இவ்வாறு தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கினால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அண்ணாமலை அந்த பொறுப்பு தனக்கு வேண்டாம் என கூறி விட்டார்.

* விலகவில்லை… விலக்கப்பட்டார்… அரசியலில் அண்ணாமலை ஜீரோ: போட்டு உடைத்த எஸ்.வி.சேகர்
அண்ணாமலை விலகல் குறித்து முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி: தமிழக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகவில்லை. அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் ஒரு தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது என்பது நயினார் நாகேந்திரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். அதனால் இவரை பொறுப்பாளராக அறிவித்த 6 தொகுதிகளிலும் நிச்சயம் பாஜ வெல்லாது என்பது தெரியும். தனது தலைமையில் தமிழக பாஜ நிறைய இடங்களில் கடந்த 2021ம் ஆண்டு ஜெயிக்கவில்லை என்கிற போது வேறு தலைவரான நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜ வென்றுவிட கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை.

கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை தவிர வேறு யாரும் வெல்லவே கூடாது என்ற எண்ணத்துடன் தேர்தல் பணியாற்றினார். 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெல்லாததற்கு காரணம் அண்ணாமலை தான். என்டிஏ என்பது முரண்பாடான கூட்டணி. கள யதார்த்தத்தை தெரியாமல் பாஜ தேர்தலை சந்திக்கிறது. அண்ணாமலை என்பவர் தற்போது ஜீரோதான். இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலை மீதான எஸ்.வி.சேகரின் இந்த விமர்ச்சனம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சொல்வததைப் போல தேர்தல் காரணம் காட்டி அண்ணாமலையை தமிழக பாஜ தலைமை விலக்கி வைத்துள்ளதாகவே அரசியல் விமர்ச்சகர்களும் தெரிவிக்கின்றனர்.

Tags : Annamalai ,Bajaj ,Nainar ,KOWAI ,ANNAMALA ,BAJA STATE ,Govai Avinasi Road ,
× RELATED சொல்லிட்டாங்க…