×

கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை: ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. குறிப்பாக கடந்த 2021 வரை இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாகவே இருந்தது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, 2022 பிப்ரவாியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து தள்ளுபடி விலையில் அதிக அளவு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தால் வரியை குறைப்பதாக மிரட்டியது. தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அடியோடு நிறுத்தி விட்டதாக கூறி இந்தியா மீதான வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைத்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,’ பிரதமர் மோடி ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கவும் ஒப்புக்கொண்டார்’ என்று தெரிவித்தார். ஆனால் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’இந்த விஷயத்தில் இந்தியாவிடம் இருந்து நாங்கள் இதுவரை எந்த தகவலையும் பெறவில்லை. ரஷ்யா தனது உறவுகளை இந்தியாவுடன் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொடர்ந்து வளர்க்க விரும்புகிறது’ என்றார். மேலும் ஒப்பந்தங்களை ரத்து செய்வது குறித்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று ரஷ்ய எரிசக்தி அமைச்சக வட்டாரங்களும் தெரிவித்தன.

குறைத்தது உண்மை
* பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களாக மாற்றப்படும் தனது கச்சா எண்ணெயில் சுமார் 88 சதவீதத்தை இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்குகிறது.
* கேப்ளர் நிறுவன தரவுகளின்படி, ஜனவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் சராசரியாக 1.21 மில்லியன் பீப்பாய்களாகவும், 2025ஆம் ஆண்டின் மத்தியில் 2 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாகவும் இருந்தது.
* ஈராக் இப்போது ரஷ்யாவைப் போலவே ஏறக்குறைய அதே அளவு கச்சா எண்ணெயை வழங்குகிறது. இது டிசம்பர் மாதம் சராசரியாக 9,04,000 பீப்பாய்களாக இருந்தது.
* சவூதி அரேபியாவிலிருந்தும் வரும் கச்சா எண்ணெய் அளவுகள் ஜனவரியில் ஒரு நாளைக்கு 9,24,000 பீப்பாய்களாக உயர்ந்துள்ளன; இது டிசம்பரில் 7,10,000 பீப்பாய்களாகவும், 2025 ஏப்ரலில் குறைந்தபட்சமாக 5,39,000 பீப்பாய்களாகவும் இருந்தது.

Tags : India ,Moscow ,Russia ,Kremlin ,Dmitry Peskov ,
× RELATED மியான்மரில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்