நாகை சூர்யா நகர் பகுதி சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்

நாகை, பிப். 2: கடந்த 13 ஆண்டுகளாக குடியிருக்கும் சூர்யா நகர் பகுதி சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென நாகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மனு அளித்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் நாகை சூர்யா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகையில் உள்ள நல்லியான்தோட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி பகுதியை சேர்ந்த 60 குடும்பத்தினர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நாகை கலெக்டர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள சூர்யா நகரில் சுனாமி தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. மேலும் வீடுகளின் மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் அந்த வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்து கொடுக்க வேண்டும். மேலும் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

134 மனுக்கள் குவிந்தன தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று முதல் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்தார். கலெக்டரிடம் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்வி கடன், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 134 மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தட்டச்சராக தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். டிஆர்ஓ இந்துமதி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், பயிற்சி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி பங்கேற்றனர்.

Related Stories: