- ராகுல் காந்தி
- பாஜக
- லோக்
- சபா
- மோடி
- அமித் ஷா
- புது தில்லி
- மக்களவை
- இராணுவ
- எம்.எம். நரவனே
- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- ராகுல்
புதுடெல்லி: மக்களவையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய புத்தக குறிப்புகளை மேற்கோள் காட்டி பேசத் தொடங்கிய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைப் பற்றி ராகுலை பேச விடாமல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பாஜ கட்சி அமைச்சர்கள், எம்பிக்கள் கடும் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனால் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதன் பின் அவை தொடங்கிய போது பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்காமல் நழுவினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது.
இதில் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா பேசுகையில், ‘‘பலவீனமான தலைமைக்கும், சிறந்த தலைமைக்கும் இடையிலான வேறுபாடுதான் காங்கிரஸ், பாஜவை வேறுபடுத்துகிறது. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியின் 10 ஆண்டுகள் தவறவிட்ட வாய்ப்புகளின் தசாப்தம். சமாளிப்பு பொய்களின் கதை. இப்போது சிறந்த தலைமை சவால்களுக்கு மத்தியிலும் சாதித்து காட்டுகிறது. தீவிரவாதத்தை எதிர்க்க காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை.
அவர்களுக்கு தேச பக்தி இல்லை. ஆனால் மோடி அரசு ராணுவ தாக்குதல் மூலம் பதிலடி தருகிறது’’ என்றார். அவரைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘தேச பக்தி குறித்து காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முதலில் பதிலளிக்க விரும்புகிறேன்’’ என்று கூறி, கேரவன் ஆங்கில இதழில் வெளியான முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய சுயசரிதை புத்தகத்தின் சில குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரையை மேற்கோள்காட்டி பேசினார்.
‘‘2017 டோக்லாம் மோதலின் போது சீன டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. கைலாஷ் மலைத்தொடரில் உள்ள இந்திய நிலைகளுக்குச் சில நூறு மீட்டர்கள் தொலைவிலேயே சீனத் டாங்குகள் இருந்தன’’ என்று ராகுல் காந்தி பேச ஆரம்பித்ததும் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் அப்போது அவையில் இருந்தனர். ராகுல் காந்தியை தொடர்ந்து பேச விடாமல் குறுக்கிட்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘அந்த புத்தகம் வெளியிடப்பட்டதா? இல்லையா? என்பதை அவர் (ராகுல் காந்தி) முதலில் கூற வேண்டும். அந்த புத்தகம் வெளியிடப்படவில்லை. எனவே அதிலிருந்து மேற்கோள் காட்டுவதாக கூற முடியாது’’ என்றார்.
உடனே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எழுந்து, ‘‘புத்தகம் வெளியிடப்படாத போது, எதிர்க்கட்சி தலைவர் அதிலிருந்து எப்படி மேற்கோள் காட்ட முடியும்?’’ என எதிர்ப்பு தெரிவித்தார். இதைக் கேட்ட சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘செய்தித்தாள் துணுக்குகள், புத்தகங்கள் மற்றும் நம்பிக்கையற்ற பிற விஷயங்களை அவையில் மேற்கோள் காட்ட முடியாது என்று விதிகள், மரபுகள் கூறுகின்றன. எனவே இந்த விஷயத்தை விட்டு விட்டு உங்கள் உரையை தொடருங்கள்’’ என கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘கேரவன் பத்திரிகையில் புத்தகத்தின் 100 சதவீதம் உண்மையான பகுதிகள் இருக்கின்றன. அந்த ஆவணம் அங்கீகரிக்கப்பட்டது. அதிலிருந்து மேற்கோள் காட்ட எனக்கு உரிமை உண்டு. இந்த குறிப்பிட்ட விவகாரம் குறித்து நான் ஒருபோதும் பேச விரும்பவில்லை. ஆனால் பாஜ எம்பி சூர்யா காங்கிரஸ் கட்சியின் தேச பக்தியை கேள்விக்குள்ளாக்கியதால் அவ்வாறு பேச முடிவு செய்தேன்’’ என்றார். இதற்கு மீண்டும் அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னாள் ராணுவ தளபதி கூறிய கருத்துக்களை அவையில் முன்வைப்பதில் என்ன தவறு என ராகுல் காந்தி கேட்டார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை மேற்கொண்டு ஒருவார்த்தை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் கூச்சலிட்டபடி இருந்தனர்.
‘‘சபாநாயகரின் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகரின் தீர்ப்பை மீண்டும் மீண்டும் புறக்கணித்து விதிகளை மீறினால், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சபை விவாதிக்க வேண்டியிருக்கும்’’ என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். காங்கிரஸ் எம்பிக்களும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ‘‘முதலில் ராகுல் காந்தியை பேச விடுங்கள். பின்னர் உங்கள் பதிலை சொல்லுங்கள்’’ என கோஷமிட்டனர். இதனால் சுமார் 50 நிமிடங்கள் அவையில் கடும் அமளி நிலவியது.
பின்னர் ராகுல் காந்தி, ‘‘புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசவில்லை. ஆனால் பாகிஸ்தான், சீனா அல்லது பிற நாடுகளுடனான சர்வதேச உறவுகள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி உரையில் இடம் பெற்ற விவகாரத்தை பற்றி தான் நானும் பேசிக் கொண்டிருக்கிறேன். ராணுவ தளபதி நரவனேவின் புத்தகம் பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கின் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுகிறது. நீங்கள் அதை எழுப்ப என்னை அனுமதிக்க வேண்டும். இது சீனாவைப் பற்றியது அல்ல; இது பிரதமரைப் பற்றியது’’ என்றார். அதற்கும் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததார். இதனால் விரக்தி அடைந்த ராகுல் காந்தி, ‘‘ நான் என்ன பேச வேண்டும் என்பதை நீங்களே எழுதிக் கொடுத்து விடுங்கள். அதையே பேசுகிறேன்’’ என்றார்.
இப்படியே வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, ராகுல் காந்தி மீண்டும் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தை எழுப்ப முயன்றார். அவரை பேச விடாமல் பாஜ உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ராணுவத்தை இழிவுபடுத்தும் விதமாக ராகுல் காந்தி பேசக்கூடாது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்திக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸின் மகுவா மொய்த்ரா, கல்யாண் பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டதால் மாலை 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம்பிர்லா யாரும் அவைக்கு வரவில்லை. அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவைக்கு வராததன் காரணம் என்ன? இது பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் சங்கடமாக இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் தேசிய பாதுகாப்பை மிக முக்கியமான விஷயமாகக் கருதுகிறேன். இது சங்கடமாக இல்லையென்றால், அவர்கள் என்னை பேச அனுமதித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் என்னை பேச அனுமதிக்காததே, அவர்களுக்கு இது சங்கடமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது’’ என்றார். தொடர்ந்து பாஜ எம்பிக்கள் ராகுல் காந்தியை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
* புத்தகம் வெளியிடப்படாததன் பின்னணி என்ன?
ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக எம்.எம்.நரவனே கடந்த 2019 டிசம்பர் முதல் 2022 ஏப்ரல் வரை பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில், முக்கிய ராணுவ மற்றும் அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டன. மிக முக்கியமாக, ஜூன் 2020-ல் சீன வீரர்களுக்கு எதிராக நடந்த கல்வான் மோதலின் போது நரவனே இந்திய ராணுவத் தளபதியாக இருந்தார். அந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது. இது இந்தியா, சீனா நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முடக்கத்திற்கு வழிவகுத்தது. தனது பதவிக்காலத்தில் பெற்ற அனுபவங்கள் குறித்து நரவனே ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதிய கடந்த 2024ல் வெளியிட இருந்தார். பொதுவாக ராணுவ உயர் அதிகாரிகள் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடுவது தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால் இதுவரையிலும் நரவனே புத்தகத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால் வெளியிடப்படாமல் இருக்கிறது. அதற்கு முன்பாக கடந்த 2023ல் நரவனே புத்தகத்தின் சில பகுதிகள் பல ஊடகங்களில் கசிந்தன.
* ராகுல் காந்தி எதைப் பற்றி பேச வந்தார்?
முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே புத்தகத்தில் கல்வான் மோதல் சமயத்தில் நடந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலிருக்கும் பிரதமர் மோடி, பாஜ அரசு, ஒன்றிய அமைச்சர்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் கேரவன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சிலவற்றை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று பேச முயற்சித்துள்ளார்.
கேரவன் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள்: 31 ஆகஸ்ட் 2020 இரவு 8.15 மணி: வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் ஜோஷிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘‘சீன ராணுவத்தின் 4 டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள ரேச்சின் லா மலையின் மீது ஏறி கொண்டிருக்கின்றனர்’’ என்ற தகவல் வந்தது. அதை அவர் ராணுவ தளபதி நரவனேக்கு தெரிவித்துள்ளார்.
இரவு 8.15 9.25 மணி: உடனே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல், ராவத், ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்த்து ராணுவம் காத்திருந்தது. ஆனால் தாக்குதல் எதுவும் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இரவு 10 மணி: இரு தரப்பிலும் ராணுவம் மேலும் முன்னேறாத வகையில் நிறுத்தப்படுகிறது. சீன ராணுவம் அடுத்த நாள் காலையில் சந்திக்க விரும்புவதாக ராஜ்நாத், அஜித் தோவலுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால் மீண்டும் சீன ராணுவம் முன்னேற தொடங்குகிறது. இந்த சூழலில் எதிரி நாட்டு படைகளை தடுத்து நிறுத்த சிறிய அளவில் தாக்குதலை தொடுக்க வேண்டும் என்று ராணுவம் விரும்புகிறது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து தெளிவாக எந்தவித உத்தரவுகளும் வரவில்லை.
இரவு 10.30 மணி: ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள்’ என்று பொறுப்பை ராணுவத்திடமே ஒப்படைக்கும் வகையில் ராஜ்நாத் சிங் பதிலளிக்கிறார். இந்த தகவல்கள் அனைத்தும் எம்.எம்.நரவனே எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாக கேரவன் இதழ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
