×

புதிய வருமான வரிச்சட்டம் ஏப்.1ல் அமலுக்கு வருகிறது; பொய் கணக்கு காட்டி ஏமாற்றினால் 100% வரி அபராதம் விதிக்கப்படும்: ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி: புதிய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பொய் கணக்கு காட்டி ஏமாற்றினால் நூறு சதவீதம் வரி அபராதம் விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு, ரிசர்வ் வங்கியின் போர்ட்போலியோ முதலீட்டுத் திட்டம் அனுமதிக்கிறது. இதன்மூலம் இவர்கள் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.
* மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மூலம் பெறப்படும் இழப்பீடுகளுக்கு வருமான வரி மற்றும் டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு விற்பனையின்போது செலுத்தப்படும் பேக்கேஜ் கட்டணத்தில், பரிவர்த்தனை தொகைக்கு ஏற்ப 5 சதவீதம் மற்றும் 20 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இது தற்போது 2 சதவீதமாக குறைக்கப்பட்டது. குறைந்த பட்ச பரிவர்த்தனை என அல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.
* இந்தியர்கள் ஒவ்வோர் நிதியாண்டிலும் வெளிநாடுகளுக்கு கல்வி, சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, உறவினர்களுக்கு நிதியுதவி, வெளிநாட்டு முதலீடுகள் போன்ற காரணங்களுக்காக 2.5 லட்சம் டாலர் அனுப்புவதற்கு, ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டம் வழி வகுக்கிறது. இவ்வாறு பணம் அனுப்பும்போது 5 சதவீத வரி வசூலிக்கப்படும். இந்த வரி 2 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* வேலைகளுக்கு ஆட்கள் சப்ளை செய்யும் சேவைகளுக்கு வரி பிடித்தம் 1 அல்லது 2 சதவீதமாக இருக்கும்.
* பல்வேறு பத்திர பாதுகாப்பு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ள வரி செலுத்துவோரிடம் இருந்து 15ஜி அல்லது 15 எச் படிவம் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
* திருத்திய வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிசம்பர் 31ம் தேதியில் இருந்து, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த அவகாசம் பெற ஒரு கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
* வருமான வரி கணக்கு தாக்கல் தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை. தனிநபர்கள் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 2 படிவங்களை ஜூலை 31க்குள்ளும், தணிக்கைக்கு உட்படுத்தப்படாத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை கணக்குகளை ஆகஸ்ட் 31க்குள்ளும் தாக்கல் செய்யலாம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களின் சொத்துக்களை விற்பனை செய்யும்போது, அதற்கான வரி டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்யப்படும். அந்த வரி டான் எண்ணுக்குப் பதிலாக அந்த சொத்தினை வாங்கும் இந்தியரின் பான் கணக்கு மூலம் டெபாசிட் செய்யப்படும்.
* சிறிய அளவில் வருமான வரி செலுத்துபவர்கள், தங்களின் வெளிநாட்டு சொத்துக்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், மறு மதிப்பீடுகள் துவங்கிய பிறகும், கூடுதலாக 10 சதவீத வரி செலுத்தி தங்கள் ரிட்டர்னில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
* டிடிஎஸ் செலுத்துவதற்கான ஆவணங்கள், கணக்கு புத்தகங்கள் தாக்கல் செய்யாதது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது.
* மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ள வெளிநாட்டு அசையா சொத்துக்களை தெரிவிக்காததற்காக வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது 1.10.2024 தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
* குடியுரிமை இல்லாத, உத்தேச அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு குறைந்த பட்ச மாற்று வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* புற்று நோயாளிகளுக்கான 17 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* சரக்குகள் அனுமதி மற்றும் ஒப்புதல்களுக்கு ஒன்றை மற்றும் டிஜிட்டல் சாளரம்.
* ஒருங்கிணைந்த சுங்க அமைப்பு 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
* நேர்மையாக வரி செலுத்துவோர், அபராதத்துக்குப் பதிலாக ஒரு கூடுதல் தொகையை செலுத்தி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.
* எப் அண்ட் ஓ எனப்படும் ஊக வணிகத்தில் பங்கு பரிவர்த்தனை மீதான வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், ஆப்ஷன்களுக்கு 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 1961ம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரிச்சட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதில், பழைய சட்டத்தில் இருந்த 700க்கும் மேற்பட்ட பிரிவுகள் நீக்கப்பட்டு, பிரிவுகளின் எண்ணிக்கை 534 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வரி ஆண்டு என்ற புதிய கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு, முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு இடையிலான குழப்பம் நீக்கப்பட்டுள்ளது. வரி கணக்கீடு, தாக்கல் செய்தல் மற்றும் வசூல் தொடர்பான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வருமான வரிச்சட்டம், இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
* பொய் கணக்கு காட்டி அல்லது வருமானத்தை மறைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், நூறு சதவீதம் வருமான வரி அபராதமாக விதிக்கப்படும் என பட்ஜெட் உரையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

* வெளிநாட்டு சொத்து விவரம் சமர்ப்பிக்க புதிய திட்டம்
மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், இடம்பெயர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் போன்ற சிறிய வரி செலுத்துவோருக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் குறைவான வருவாய் அல்லது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க, 6 மாதங்களுக்கு ஒரு முறை வெளிநாட்டு சொத்து விவரங்களை சமர்ப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படகிறது. தங்கள் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்து விவரம் தெரிவிக்காதவர்கள், வெளிநாட்டு வருமானத்தை வெளிப்படுத்தியவர்கள் மற்றும் அல்லது நிலுவைத் தொகை செலுத்தியவர்கள், கையகப்படுத்தப்பட்ட சொத்தை அறிவிக்க முடியாதவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

* வரி ஏய்ப்புக்கு அபராதம் – விளக்கம்
மாதச்சம்பளதாரர்களுக்கு வருவாய் விவரங்கள் நிறுவனம் மூலம் சென்று விடுகிறது. இதில், வருமானத்தை மறைப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. ஆனால், இது அல்லாமல் தனியாக ஒரு நபர் ரூ.3 லட்சம் வருவாய் ஈட்டுவதாகவும், அவரது வருமான வரி பிரிவு 30 சதவீதம் எனவும் வைத்துக் கொள்ளலாம். அதன்படி, பட்ஜெட்டில் உத்தேசிக்கப் பட்டுள்ள திட்டத்தின் படி அபராதம் கணக்கீடு வருமாறு:
வருமான வரி விகிதம் 30 சதவீதம்
மறைக்கப்பட்ட
தொகைக்கு வரி ரூ.90,000/-
வரி தாமதத்துக்கு
வட்டி இருந்தால் ரூ.15,000/-
100% அபராத வரி ரூ.90,000/-
மொத்தம் செலுத்த
வேண்டியது ரூ.1,95,000/-

Tags : Union government ,New Delhi ,
× RELATED தேர்தல் நேரமாக இருந்தும் கூட...