×

திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: அண்ணாமலையாரை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியொட்டி இன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். 6 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 6.13 மணிக்கு தொடங்கி நாளை (2ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியொட்டி அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பவுர்ணமி மற்றும் தைப்பூசம், வாரவிடுமுறை நாள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் பெரிய தெரு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 6 மணி நேரம் ஆனது. அதேபோல் பவுர்ணமி கிரிவலம் இன்று காலை தொடங்கிய நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் வர தொடங்கினர். பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கிரிவல பாதையில் உள்ள அனைத்து அஷ்டலிங்க சன்னிதிகள், இடுக்குபிள்ளையார் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி அண்ணாமலையார் கோயில் ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தார். அண்ணாமலையார் தீர்த்தவாரி முடிந்து கோயிலுக்கு திரும்பும் வழியில், வள்ளால மகாராஜா இறந்த செய்தி அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் மேளதாளம் இன்றி சுவாமி கோயிலுக்கு திரும்பினார்.

Tags : Thiruvannamalai ,Girivalam ,Tiruvannamalai ,Swami ,Tiruvannamalai Annamalai ,
× RELATED தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு...