- தைபுசா விழா
- திருப்பூருர்
- திருத்தணி
- குணராத்தூர் முருகன் கோயில்கள் கோலகலம்
- காவடி திருப்பூரூர்
- முருகப்பெருமன்
- திருப்போரூர் கந்தசாமி கோவில்
- சென்னை
- சுவாமி
திருப்போரூர்: சென்னை அருகே திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் இன்று முருகப்பெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா மிகச் சிறப்புற கொண்டாடப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தனியே சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்றிரவு 7 மணியளவில் கோயிலை ஒட்டியுள்ள சரவணப்பொய்கை குளத்தில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருப்போரூர் முருகன் கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்களின் வருகையால் 4 மாட வீதிகள் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான வாகனங்களுடன் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதையடுத்து அனைத்து வாகனங்களை புறவழிச்சாலை வழியாக போலீசார் திருப்பிவிட்டனர்.
திருத்தணி முருகன் கோயில்;
முருகப்பெருமானின் 5ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு, அதிகாலை 3 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் வெண்ணிற பட்டு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால் மலைக்கோயிலின் மாடவீதிகள் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் ரூ.100 கட்டண வழியில் 3 மணி நேரமும், பொது தரிசன வழியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மலைக்கோயிலில் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மலைப்பாதையில் கார், வேன், இருசக்கர வாகனங்கள் பல்வேறு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்றுவர, இன்று அதிகாலை முதல் கோயில் நிர்வாகம் சார்பில் 15 இலவச பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குன்றத்தூர் முருகன் கோயில்;
குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக, குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் அரோகரா கோஷங்களுடன் முருகனை வணங்கி வழிபட்டனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், தங்களின் உடலில் அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்து, முருகனை தரிசித்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில் வளாகத்தில் தன்னார்வலர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக இன்றிரவு 11 மணிவரை கோயிலின் நடை திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
