×

உலகம் முழுவதும் 188 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சென்னை: உலகம் முழுவதும் சுமார் 188 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல் பருமன் பிரச்னையுடன் வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகளில் உடல் பருமன் அதிகரிப்பு, உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் கடுமையான பொதுச்சுகாதார சவால்களில் ஒன்றாக மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடல் பருமன் தடுப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய உலகளாவிய வழிகாட்டுதல்களில், 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 390 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக எடையுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இவர்களில் 188 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எதிர்காலத்தில் நீரிழிவு, இதய நோய்கள் உள்ளிட்ட பல நீடித்த நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய குழந்தைகள் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். இதனால் சிறுவயதிலேயே தவறான உணவு பழக்கங்கள் உருவாகி, குறைந்த வயதிலேயே உடல் பருமன் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையை கட்டுப்படுத்த அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை குறிவைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான விளம்பரங்களை கட்டுப்படுத்துதல், பள்ளிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் விற்கப்படும் உணவுகளின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்துதல், உணவுப் பொருட்களில் தெளிவான முன்புற எச்சரிக்கை லேபிள்களை கட்டாயப்படுத்துதல் உள்ளிட்டவை அவசியம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் ஆரோக்கியமான உணவு வழங்குதல், பாதுகாப்பான குடிநீர் வசதி, தினசரி உடற்பயிற்சி ஆகியவை குழந்தைகளின் வாழ்க்கை முறையில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உடல் பருமன் என்பது இனி வல்லரசு நாடுகளுக்கே உரிய பிரச்னை அல்ல. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலும் இந்த பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நாடுகளில் குழந்தைகள் வளர்ச்சியில் ஏற்படும் சத்து குறைபாடு, மலிவான விலையில் எளியதாக கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், குழந்தைகளின் உடல் பருமன் மேலும் அதிகரித்து, எதிர்காலத்தில் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமையும். உடல் பருமனை ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பது, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை குறைக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : World Health Organization ,Chennai ,
× RELATED தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு...