சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில் தற்போதுவரை செய்தியாளர்களைச் சந்திக்காமல் அரசியல் செய்துவருகிறார் தவெக தலைவரும் நடிகருமான விஜய். தவெக மீதான விமர்சனங்கள் மற்றும் கேள்விக்குப் பதிலளிக்கும் ஒரே இடமாக மேடைகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறார் விஜய். எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார் விஜய், எப்போது நேர்காணல் கொடுப்பார், கேள்விகளை எதிர்கொள்ளும் திறமை இல்லையா என பல்வேறு விதமான விமர்சனங்கள் கேள்விகளாக எழுந்தது.
இந்நிலையில், அரசியல் வரலாற்றில் புதிய வடிவிலான நேர்காணலை இந்த தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் பகுதிநேர அரசியல்வாதி விஜய். அதற்கு போலி நேர்காணல் என்ற பெயரையும் வழங்கியுள்ளார். இந்த வடிவத்தில் செய்தியாளர்கள் அவருடன் கலந்துரையாடி, பதில்களை கேட்டுக்கொண்டு, பிறகு விஜய்யின் அனுமதியுடன் செய்தியாளர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி, பதில்களை பொதுவெளியில் நேர்காணல் வடிவில் வெளியிடவேண்டும். இந்த வடிவத்தில், நேர்காணல் கொடுப்பவரின் பதில்கள் ஒலி, காணொலி, எழுத்து என எந்த வடிவிலும் இருக்காது என்பது வரலாறு கண்டிராத ஒன்று என சமூக வலைதளங்களில் விஜய்யை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ஒரு தொலைக்காட்சியின் கலந்தாய்வு நிகழ்வில் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்களின் அரசியலையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அந்த நிகழ்ச்சிக்கு தவெக தலைவர் விஜய்யும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், விஜய் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல், அந்தச் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர்களை தன் அலுவலகத்திற்கு நேரடியாக அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடி, அப்போது பேசியவற்றை தனது கருத்துகளாகப் பொதுவெளியில் வெளியிட்டுக்கொள்ளவும் என அனுமதி வழங்கியுள்ளார்.
இதை போலி நேர்காணலாக கருதிக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது தான் சமூக வலைதளங்களில் விஜய்யை கிண்டல் செய்வதற்கான காரணம். பேட்டி எடுத்தவரை பேட்டி எடுக்கும் நிகழ்வு, விஜயின் பேட்டியின்போதுதான் நடந்துள்ளது என்றும் கிண்டலடித்து வருகின்றனர். அந்த கலந்துரையாடலின் போது விஜய் கூறியதாகக் கூறப்படும் சில தகவல்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதில் குறிப்பாக, ‘‘கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க தயக்கம் அல்லது தன்னம்பிக்கை குறைவு எனக்கு இருப்பதாகச் சிலர் நினைப்பதில் உண்மையில்லை என்று நினைக்கிறேன்.
இன்று எல்லா வகையான கேள்விகளுக்கும் அமைதியாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளேன்’’ என விஜய் கூறியதாகக் கூறப்படுகிறது. அப்படி தனக்கு கேள்விகளை எதிர்கொள்வதில் தயக்கம் இல்லை எனச் சொல்லும் விஜய் கேமராவிற்கு முன்னால் வந்து செய்தியாளர்களைச் சந்திக்காமல் பயப்படுவது ஏன் எனக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதேபோல், ‘‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் அர்த்தமுள்ள சாதனைகளைச் செய்த தலைவர்கள்; அவர்களை நான் முன்மாதிரிகளாக பார்க்கிறேன்’’ என்று அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்தும் விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஒருபுறம் மறைந்த தலைவர்களை தன் முன்மாதிரியாகக் கூறும் விஜய், மறுபுறம் அவர்கள் சார்ந்த கட்சிகளை விமர்சிப்பது என இரட்டை குதிரையில் பயணிப்பது தெளிவில்லாத ஒரு அரசியல்வாதியின் அடையாளங்கள் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, ஏற்கனவே எல்லா தலைவர்களையும் கொள்கை தலைவர்கள் எனச் சொல்லிக் கதம்பவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘‘நான் இடதும் இல்லை, வலதும் இல்லை. எனக்கு அரசியல் என்றால் மக்களின் பிரச்னைகள்; அதுவே முக்கியம்’’ எனவும் கூறியதாகக் கூறப்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், இது கொள்கை தெளிவில்லாததன் வெளிப்பாடு என விமர்சித்து வருகிறார்கள்.
