×

காங். மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை வருகை: நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

சென்னை: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென இன்று சென்னை வருகிறார். அவர் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க ராகுல்காந்தி தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று முன்தினம் புதுச்சேரி வருவதாக இருந்தது. ஆனால் அவரது புதுச்சேரி சுற்றுப்பயணத் திட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. ஒருவேளை வந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருகிறார். அவர் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக இன்று மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, ராகுல்காந்தியின் சென்னை வருகை, தொகுதி வாரியாக நடைபெறும் தேர்தல் பணிகள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர்கள் விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை மற்றும் உரிய நபர்களை தேர்வு செய்து அவர்கள் பெயரை தலைமைக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வார் ரூம் நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தொகுதி வாரியம் நடைபெறும் கட்சியினரின் தேர்தல் பணிகள், என்னென்ன பணிகள் நடைபெறுகிறது, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் தொகுதிகள் உள்ளிட்ட தரவுகளை வார் ரூம் மூலம் வாங்கி அதுதொடர்பாக அலசி ஆராயவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேலிட பொறுப்பாளரின் திடீர் வருகை தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : CHENNAI ,Congress ,Chief Officer ,Krish Sodankar ,TAMIL NADAL ,Rakulganti ,Dimuga ,
× RELATED மாம்பழம் சின்னம் யாருக்கு? ஐகோர்ட்டில் நாளை விசாரணை