×

திமுக சாதனைகள், ஒன்றிய அரசின் வஞ்சகத்தை எடுத்து சொல்லும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை இன்று தொடக்கம்

சென்னை: திமுக அரசின் சாதனைகளையும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப் பயணம் திமுக சார்பில் இன்று தொடங்குகிறது. திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏ எழிலன், எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மக்களோடு இருந்து இதுவரை திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதற்காக ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப் பயணத்தை தலைமை கழகம் அறிவித்திருக்கிறது.

2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, அனைத்துதரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம் ஆகிய மூன்று துறைகளில் அனைத்து மக்களுக்குமான பல நல்ல திட்டங்களை வழங்கி இருக்கிறது. ஆனால், இதற்கு உரிய ஒத்துழைப்பை, ஒன்றிய அரசு வழங்குகிறதா என்றால் இல்லை. நேரடியாக மக்களுக்கு செய்ய வேண்டிய பல திட்டங்களை மாநில அரசு தான் செய்ய வேண்டும். நேரடியாக மக்களுக்கு திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுக்கு நிதி தராமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு; எதை கேட்டாலும் தர முடியாது என்கிறது. இப்படிப்பட்ட அரசு ஒன்றியத்தில் இருக்கும் பொழுது இதையும் மீறி தமிழ்நாட்டு மக்கள் தான் முக்கியம் என்ற அளவில் தமிழ்நாடு அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி செல்கிறார்.

ஒன்றிய அரசு துரோகம் செய்கிற அரசாக இருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமரே இங்கு வந்து எய்ம்ஸ் என்ற ஒரு மருத்துவ கல்லூரியை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இன்றுவரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. மருத்துவ கல்லூரி வரவில்லை என்றால் யாரை ஏமாற்ற பிரதமர் இங்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் எப்பொழுது வந்தாலும் மக்கள் இவர் இந்த முறை எதை சொல்லி ஏமாற்ற போகிறாரோ என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மீது தங்களுடைய வெறுப்பை காட்டுகிறது. தமிழர்களின் பெருமையை சொல்லக்கூடிய தமிழர்களின் தொன்மையை சொல்லக்கூடிய கீழடி ஆய்வை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு என்று எந்த திட்டத்தையும் வழங்குவதில்லை.

தமிழ்நாட்டுக்கு ரயில்வேயில் இவ்வளவு தந்தோம் என்று சொல்கிறார்கள். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கு எட்டு கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். காசி ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டுக்கு என்றால் ஒரு வகையிலும் வட மாநிலங்களுக்கு என்றால் ஒரு வகையிலும் செயல்படுகிற அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. இந்த பாஜ அரசு தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. மதக் கலவரங்களை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது.

மக்களிடம் அமைதியையும் ஒற்றுமையையும் குலைக்கிற அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. இது போன்ற ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிரான பிரசாரத்தையும் எங்களுடைய சாதனைகள் குறித்த பிரசாரத்தையும் எங்களுடைய திமுகவின் முன்னணி சொற்பொழிவாளர்கள் 22 பேர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதிவாரியாக சென்று மக்களிடையே எடுத்து சொல்ல இருக்கிறார்கள். அதற்காக ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பிலே இந்த பிரசார பயணம் நாளை (இன்று) முதல் தொடங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tamil Nadu Talaykuniyadu ,DMK ,Union government ,Chennai ,Tamil Nadu ,DMK government ,DMK Press ,T.K.S. Ilangovan ,MLA ,Ezhilan ,Kanimozhi… ,
× RELATED காங். மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை...