×

முதல்நாள் அங்க… மறுநாள் இங்க… சொந்த மாவட்டத்தில் காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்

தேனி: முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்கழக தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இரு தினங்களுக்கு முன், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில், ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் தன் பக்கமே இருப்பதாகவும், யாரும் எடப்பாடி அணிக்கு செல்லவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்த தேனி ஒன்றிய செயலாளரான முருகேசனும் கலந்து கொண்டார்.

அன்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிர்வாகிகள், துண்டுச் சீட்டை கொடுத்து முடிவை தெரிவிக்குமாறு ஓபிஎஸ் அறிவித்ததும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நிலையான முடிவை அறிவிக்கவில்லை. இதனால் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான நிர்வாகிகள் பெரும் ஏமாற்றத்திற்கு
ஆளாகினர்.

இந்நிலையில், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தேனி ஒன்றிய செயலாளரான நாகலாபுரத்தைச் சேர்ந்த முருகேசன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அதிமுகவின் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் எல்லப்பட்டி முருகன் மற்றும் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருடன் தேனி ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரும் ஓபிஎஸ் ஆதரவு அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Tags : Theni ,Former ,Chief Minister ,High Commissioner for Voluntary Rights Rescue Committee ,O. Paneer Selvam ,Kailasabadi ,Peryakulam, Teni district ,
× RELATED காங். மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை...