×

திருமண வரத்துக்கு பெயர் போன ஊரில் தெருக்கூத்து நடத்தி சீட் வரம் கேட்கும் மாஜி ஐஆர்எஸ்: தினமும் ஒரு ‘பில்டப்’ நக்கல் அடிக்கும் மக்கள்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டத்தின் தொழில்வளம் நிறைந்த சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருச்செங்கோடு. இத்தொகுதியில் அதிமுக 7 முறை, திமுக 3 முறை, காங்கிரஸ் 2 முறை, சுயேட்சை, இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், தேமுதிக, கொமதேக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை வித்தியாசமாக வழங்கிக் கொண்டிருக்கும் திருச்செங்கோடு தொகுதியில் முதல் தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சினிமா பாணியில் மூவ்மென்ட்டுகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்யும் பில்டப்புகள் அக்கட்சியினரையே அதிர வைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ் மருத்துவம் படித்தவர். பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று 2009ம் ஆண்டு சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றினார். 2021ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது, அங்கு பணிமாற்றப்பட்டு பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றினார். அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு 2025ம் ஆண்டு, மே மாதம் விருப்பஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவியை நடிகர் விஜய் வழங்கினார். இப்படி மாநில பொறுப்பை விஜய் வழங்கிய நிலையில், சில நாட்களாகவே அவரது கவனம் திருச்செங்கோட்டில் மட்டுமே நிறைந்திருப்பது கட்சியினர் மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொங்கல் நாளில் விஜய்யை வானளவ புகழ்வது போல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டவர், அதில் உங்கள் ‘மண்ணின் மைந்தன் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி’ என்பதை பிரதானமாக வெளிப்படுத்தினார். அன்றைய தினம் ஒரு கிராமத்தில் பொங்கல் விழாவிற்கு சென்றவர், அங்கு அரசியல் பேசினார். இதனால் அதிருப்தியில் ஆழ்ந்த ஊர்மக்கள், இங்கு பொங்கலை பற்றி மட்டுமே பேசவேண்டும். அரசியல் பேசக்கூடாது என்று குட்டு வைத்து அனுப்பினர். இதையடுத்து விஜய்யின் நண்பரான நடிகர் ஸ்ரீநாத்தை அழைத்து வந்து பிரமாண்ட விசில் தயாரித்து மக்களிடம் கொடுப்பது, சுவர்களில் தானே விசில் வரைந்து கவனத்தை ஈர்ப்பது, பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மத்தியில் வாலண்டிரியாக சென்று காவடி தூக்கி ஆடுவது என்று தினம், தினம் பில்டப்புகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்தபோதே பாஜவுடன் நெருக்கமாக இருந்தவர் அருண்ராஜ். அதன்பிறகு ரஜினி புதிய கட்சி ஆரம்பிக்கும் போது, அதில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளார். மாஸ்டர் படப்பிடிப்பு நேரத்தில் விஜய்யுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக்கி கொண்டார். விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார். அவரது பூர்வீகம் திருச்செங்கோடு அருகேயுள்ள கிராமம். மனைவியின் சொந்த ஊர் நாமக்கல். இதனால் திருச்செங்கோட்டில் போட்டியிட காய்நகர்த்தி வருகிறார். அது மட்டுமன்றி செங்கோட்டையனுடன் தவெகவில் இணைந்த ஆதரவாளர்கள் சிலரும், இங்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதை எல்லாம் மைன்டில் வைத்து திருச்செங்கோடு தொகுதியை தக்க வைக்க உறுதியாக இருக்கிறார். ஆனால் மாநில பொறுப்பில் இருக்கும் ஒருவர், கட்சியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்காமல், தான் விரும்பிய தொகுதி தனக்கு வேண்டும் என்று பில்டப் கொடுத்து அதற்காக மட்டுமே பணியாற்றி வருவது தான் மிகவும் வருத்தமானது,’’ என்றனர். திருமண வரத்துக்கு பெயர் போன கோயில் உள்ள ஊரில் தேர்தலுக்கு சீட் வாங்க தெருக்கூத்து போட்டு வரம் கேட்கும் மாஜி ஐஆர்எஸ் நடத்தும் நாடகத்தை பார்த்த அப்பகுதி மக்கள், தலைவர் ஒரு பெரிய நடிகர். அவர் வழி வந்த தொண்டர்கள் மட்டும் என்ன நடிக்க மாட்டார்களா? என நக்கல் அடித்து வருகின்றனர்.

* மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்…
அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் துப்பாக்கிச்சூடு குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘‘இந்த சம்பவத்தை டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’’ என்றார். ஆனால், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது தெரியவந்தது.

எடப்பாடி பேட்டியளித்தபோது அப்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையன் பின்னால் நின்று கொண்டு ஆமா சாமி போட்டார். ஆனால், நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், ‘‘தூத்துக்குடியில் 13 பேரை குருவி சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள். அப்போது, இபிஎஸ் அங்கு நேரில் போய் பார்த்தாரா?’’ என கேள்வி எழுப்பினார். தற்போது, இரண்டு பேட்டிகளின் போட்டோவை பகிர்ந்து, மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்…’ என நெட்டின்சன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tags : IRS ,Thiruchengode ,Namakkal district ,AIADMK ,DMK ,Congress ,Independent ,E.Communist ,Ma.Communist ,DMDK ,K.M.Dekha ,
× RELATED ஆசை இருக்கலாம் ஆனா… இது பேராசை