பள்ளிகொண்டா: கரூர் சம்பவத்துக்கு பின் புதுச்சேரி, ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய தவெக தலைவர் விஜய், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வேலூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக வேலூர் மாவட்டத்தில் இறைவன்காடு, கந்தனேரி உட்பட பல்வேறு இடங்களை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில், பள்ளிகொண்டா அடுத்த சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒடுகத்தூர் செல்லும் சாலையில் சுமார் 25 ஏக்கர் இடத்தை தவெக கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தில் பிப்ரவரி 2வது வாரத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். இதனிடையே அதிகாரப்பூர்வ தேதி உறுதியாகாத நிலையில், தேர்வு செய்த இடத்தை 8 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சமன்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.
