நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர், அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை தன்னை தவிர மற்றவர்கள் கட்சியில் பெரிய இடத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருந்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனக்கு துணை முதல்வர் பதவி கிடைத்து விடும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருவதாகவும், தன் ஆசையை வெளிப்படுத்தி வருவதாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கட்சிக்குள்ளே பேசிக்கிறாங்களாம். இதற்காக திரைமறைவில் பல்வேறு வேலைகளையும் கச்சிதமாக செய்து வருவதாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்,‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிமுகவில் தற்போது இருக்க கூடிய தலைவர்களில் ஓ.எஸ்.மணியன் சீனியர். கடந்த ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு துணை முதல்வர் பதவிக்கான அதிஷ்டம் வந்தது. ஆனால், சில காரணங்களுக்காக துணை முதல்வர் பதவி அவருக்கு கிடைக்காமல் போனது. அப்போது இருந்தே துணை முதல்வர் பதவியை எப்படியாவது அடைந்தாக வேண்டும் என்பதில் மாஜி அமைச்சர் குறிக்கோளாக இருந்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்.
ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் தனக்கு துணை முதல்வர் பதவி கிடைத்து விடும் என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். இந்த தகவல் தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சென்று உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதே கடினமாக உள்ள நிலையில் ஓஎஸ்மணியன் வேற துணை முதல்வர் பதவியை குறி வைத்துள்ளார். இவரை போல் துணை முதல்வர் பதவி கனவில் டெல்டா மாவட்டத்தில் எந்தெந்த மாஜி அமைச்சர்கள் இருக்காங்க என்பதை தெரிந்து கொள்ள தனது ரகசிய டீம் ஒன்றை களத்தில் இறக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்’’ என்றனர்.
