×

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிடுச்சே… அதிமுகவுல சீட் கேட்டு பாஜவிடம் தவம் கிடக்கும் வேட்பாளர்கள்

சாத்தூர்: காராச்சேவுக்கு பிரசித்தி பெற்ற விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்க கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது செல்வாக்கை பயன்படுத்தி, தனக்கு எதிராக கொடிப்பிடித்த ராஜவர்மனுக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டார். இதனால் அதிமுக சார்பில் ரவிச்சந்திரன் போட்டியிட்டார்.

நொந்துபோன ராஜவர்மன், டிடிவி.தினகரனின் அமமுகவில் இணைந்து குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் மதிமுகவை சேர்ந்த ரகுராமன் 74,174 வாக்குகள், அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் 62,195 வாக்குகள், அமமுக சார்பில் போட்டியிட்ட ராஜவர்மன் 32,916 வாக்குகள் பெற்றனர். தற்போது அதிமுக, பாஜ, அமமுக கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே, இங்கு போட்டியிட்டால் உறுதியாக வெற்றி பெறமுடியும் என்ற எண்ணத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

ஏற்கனவே, இத்தொகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று செய்தி பரவியது. இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் தற்போது நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில்தான் போட்டியிட உள்ளார் என பரவலாக கூறப்படுகிறது. இதனால், சாத்தூரில் சீட் வாங்க அதிமுகவினர் மீண்டும் முழுமூச்சில் களமிறங்கியுள்ளனர். இதில் ராஜவர்மன், ரவிச்சந்திரன், எதிர்க்கோட்டை சுப்ரமணியன், சிவசாமி ஆகியோரிடையே பிரதான போட்டி நிலவுகிறது.

இவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை மட்டும் நம்பியிருக்காமல், அவருக்கு நெருக்கமான பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனையும் சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. ‘சாத்தூர் தொகுதியை பாஜ போட்டியிட வேண்டாம்ணே… அதிமுக சார்பில் எங்களுக்கு சீட் கிடைக்க நீங்கள் தான் எடப்பாடியிடம் பேச வேண்டும்’ என உருக்கமாக வேண்டி வருகின்றனர். இவர்களை சந்திக்கும் நயினாரும், ‘அப்படியே செய்துவிடுவோம்’ என்று ஆறுதல் கூறி வருகிறாராம்.

பாஜ தரப்பில் விசாரித்தபோது, ‘சாத்தூரில் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு இருக்கும் சூழலில் நாம் ஏன் ஒதுங்கிப் போக வேண்டும். நாமே சீட்டை வாங்கி ஒரு ஆளை நிறுத்தி வெற்றிபெற்றால் என்ன?’ என்ற கோணத்திலும் நயினார் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, பாஜவில் சீட் பெற முக்கிய பிரமுகரான கோபால்சாமி உள்ளிட்டோர் சைலண்டாக காய் நகர்த்தி வருகின்றனர். எடப்பாடியும், சாத்தூரில் பல கோஷ்டிகள் இருப்பதால் யாருக்கு ஒதுக்கினாலும் பிரச்னைதான். பேசாமல் பாஜவிடம் தள்ளிவிடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Tags : BJP ,AIADMK ,Sattur ,assembly ,Virudhunagar district ,Karachi ,East District ,Ravichandran ,MLA ,Rajavarman ,
× RELATED ஆசை இருக்கலாம் ஆனா… இது பேராசை